< Back
மாநில செய்திகள்
மோடியின் பணமதிப்பிழப்பு மிகப்பெரும் மோசடி: செல்வப்பெருந்தகை காட்டம்
மாநில செய்திகள்

மோடியின் பணமதிப்பிழப்பு மிகப்பெரும் மோசடி: செல்வப்பெருந்தகை காட்டம்

தினத்தந்தி
|
8 Nov 2024 3:25 PM IST

ராகுல்காந்தியின் செயல்பாடு ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8 அன்று புழக்கத்தில் இருந்த ரூபாய் 500, ரூபாய் 1,000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தது இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும். மோடி உருவாக்கிய பணமதிப்பு நீக்க பேரழிவு என்பது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடியாகும்.

கருப்புப் பணம், கள்ளப் பணம் ஒழிக்கப்படும் என்றார்கள். ஆனால் அவர்கள் கூறியபடி ஒன்றும் நடக்கவில்லை. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 15.44 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளில் 15.31 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் அதாவது, 99.9 சதவிகிதம் வங்கிகளுக்கு திரும்ப வந்து சேர்ந்து விட்டன. அப்படியானால் கள்ளப் பணம் எங்கே? கருப்புப் பணம் எங்கே? என 8 ஆண்டுகள் கழித்து மோடி ஆட்சியை நோக்கி பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டிய நாள் நவம்பர் 8.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆன செலவு ரூபாய் 12,677 கோடி. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்குதான் பயன்பட்டது. நாடு முழுவதும் கருப்புப் பணம் வெள்ளை பணம் ஆவதற்கு மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெருமளவில் உதவி செய்திருக்கிறது.

எனவே, பிரதமர் மோடி அறிவித்தபடி கருப்புப் பணமோ, கள்ள பணமோ பயங்கரவாத நடவடிக்கைகளோ குறைந்தபாடில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது வரலாறு காணாத பொருளாதார பேரழிவாகவும், மக்களின் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகவும்தான் அமைந்து விட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நவம்பர் 8-ம் நாள் மக்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள் குறித்து பிரதமர் மோடி என்றைக்குமே கவலைப்பட்டதாக தெரியவில்லை.

மக்களவையிலும், மக்கள் மன்றத்திலும் மக்களுக்காக குரல் கொடுக்கிற மகத்தான தலைவராக ராகுல்காந்தி செயல்பட்டு வருவது மோடி தலைமையிலான ஆட்சியாளர்களுக்கு கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்துகிற சீரிய பணியில் ராகுல்காந்தி செயல்பட்டு வருவது நாட்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, பணமதிப்பிழப்பு போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் எதையாவது அறிமுகப்படுத்த பிரதமர் மோடி முயல்வாரேயானால், தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி அதை முறியடித்து வெல்லும் என்பது உறுதியாகி வருகிறது. இதன்மூலம் புதிய நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்