
"மோடி அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து" - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கீழ்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் தி.மு.க. சட்டத்துறையின் 3-வது ஒரு நாள் மாநில மாநாடு இன்று தொடங்கியது. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டை பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
காலை 10 மணிக்கு ஒரு நாடு ஒரு தேர்தல் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் மூத்த வக்கீல் கபில் சிபல் எம்.பி., முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி, இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்நிலையில் தி.மு.க. சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் பேசிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தி.மு.க. சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன். பல முக்கியமான வழக்குகளில் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, உரிமைகளை வென்றது திமுக சட்டத்துறை.
மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. மேலும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்றவற்றை தகர்க்கும் முயற்சியில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியா கூட்டணி அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்கிறது. கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.
பொது சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்து போராடி வருகிறோம். மத்திய பா.ஜ.க. அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை தி.மு.க. சட்டத்துறை தொடர்ந்து எதிர்த்து வருகிறது" என்று அவர் கூறினார்.