
சென்னை
சென்னையில் ரு.50 கோடியில் நவீன ஆட்டிறைச்சி கூடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னை, சைதாப்பேட்டை, ஆடு இறைச்சி கூடத்தில் நடைபெறவுள்ள மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது;-
"சைதாப்பேட்டை ஆடு இறைச்சி கூடம் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. மிகப்பெரிய அளவில் தென்சென்னை பகுதியில் இருக்கும் ஆட்டிறைச்சி கூடமாக இது விளங்கி வருகிறது. 2008-ம் ஆண்டு தற்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் அப்போதைய துணை முதல்-அமைச்சராக இருந்தபோது, இந்த ஆட்டிறைச்சி கூடத்தை ISO தரச்சான்றிதழ் பெறப்பட்ட நவீன ஆட்டிறைச்சி கூடமாக தரம் உயர்த்தித் திறந்து வைத்தார்.
தினந்தோறும் 300-க்கும் மேற்பட்ட ஆடுகள், ஒவ்வொரு மாதமும் 10,000 ஆடுகள் இங்கே இறைச்சிக்காக அறுக்கப்பட்டு வருகிறது. தென் சென்னை பகுதி 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் ஆகியவை 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியோடு இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் இருந்த சென்னை தற்போது 420-க்கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது. சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இந்த கூடத்தில் இருந்து ஆட்டிறைச்சி அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் ஆட்டிறைச்சி கூடம் நவீனபடுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள இந்த நவீன ஆட்டிறைச்சி கூடத்தை ஒட்டி 9 கிராவுண்ட் இடம் கடந்த ஆட்சி காலத்தில் குப்பை கொட்டும் இடமாக இருந்தது. இது அடர்த்தியான பொதுமக்கள் வசிக்கும் இடமாக இருந்ததால் குப்பை கொட்டும் இடம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதனையொட்டி 2 கிராவுண்ட் இடத்தில் மாநகராட்சியின் சிறிய கட்டிடங்கள் உள்ளது.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம், 20 கிராவுண்ட் இடத்தில் ரூ.50 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த ஆட்டிறைச்சி கூடத்தை மேம்படுத்தி நவீன ஆட்டிறைச்சி கூடமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிறிய அளவிலான கடைகள், கழிவுகளை சுத்திகரிக்கும் வசதி ஆகியவைகளும் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் தென்சென்னை பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக ஆடுகள் அறுப்பது தவிர்க்கப்பட்டு, இந்த நவீன கூடத்தை பயன்படுத்தும் நிலை ஏற்படும்."
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.