சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
|சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
சென்னை,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், திருவெற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம், எண்ணூர், மணலி, தாம்பரம், ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூர், அயப்பாக்கம், அனகாபுத்தூர், திருவல்லிக்கேணி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
தாம்பரத்தில் பெய்த மழையால் மேம்பாலத்தில் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் கடந்த 3 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.