< Back
மாநில செய்திகள்
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் அதிமுக மீது மு.க.ஸ்டாலின் பழி சுமத்துகிறார் - தம்பிதுரை கண்டனம்
மாநில செய்திகள்

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் அதிமுக மீது மு.க.ஸ்டாலின் பழி சுமத்துகிறார் - தம்பிதுரை கண்டனம்

தினத்தந்தி
|
11 Dec 2024 11:26 PM IST

தன் மீதுள்ள பழியை மறைப்பதற்காகவே மு.க.ஸ்டாலின் அதிமுக மீது பொய் செய்திகளை பரப்புகிறார் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுயநலத்தின் விளைநிலமாக திகழும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், டங்ஸ்டன் சுரங்க ஏல விவகாரத்தில் அதிமுகவும், நாடாளுமன்ற உறுப்பினரான நானும் தவறிழைத்து விட்டதாக அபாண்டமாக குற்றம்சாட்டி இருப்பதற்கு முதலில் என் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்கின்றேன்.

மு.க.ஸ்டாலின் தன் மீதுள்ள மாபெரும் பழியை மறைப்பதற்காகவே, அதிமுக மீது அவரும், அவரது அமைச்சர்களும் தவறான பொய் செய்திகளை பரப்புகிறார்கள் என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பலவகை அரிய தாது பொருட்களை வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து இந்தியா இறக்குமதி செய்வதால் நம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைகிறது. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் இயற்கை வளங்களை ஏல முறையில் விற்பனை செய்யாமல் தங்கள் மனம் போன போக்கில் அரசாங்கங்கள் சில தனியாருக்கு தாரை வார்க்கின்றன. இதன் மூலம், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாலும், நாட்டு வளங்களை தவறானவர்களுக்கு செல்வதை தடுக்க வேண்டி உள்ளது.

இந்த காரணங்களைக் கூறி நாடாளுமன்றத்தில் கனிம வளங்கள் சட்டத் திருத்த மசோதா கடந்த 28.7.2023 தேதியன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, 2.8.2023 தேதியன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றப்பட்டது. இந்த கனிம வளங்கள் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாக அமைந்து விடக்கூடாது என்று நான் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினேன்.

எனக்கு பதில் அளித்த மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி என் பெயரை குறிப்பிட்டு, இந்த சட்டத்தில் மாநிலங்களின் குழு ஒப்பதலின்படி மட்டுமே ஏல முறையில் கனிம வளங்கள் எடுக்கப்படுவதை உறுதி செய்யும் என்று உறுதியளித்தார். இது அவைக் குறிப்பில் தெளிவாக உள்ளது. மாநில அரசு அரிய வகை கனிம வளங்களை தானே வெட்டி எடுத்துத் தரும் செயலில் ஈடுப்பட்டால் அதற்கான முழு செலவையும் மத்திய அரசு தரும்.

தனியாருக்கு தருவதாக முடிவு எடுத்தால் அதனை மாநில அரசு ஒப்புதலோடு, மத்திய அரசு ஏல முறையில் மட்டுமே செய்ய வேண்டும். தாங்கள் விரும்பியவர்களுக்கு ரகசியமாக ஒதுக்கீடு செய்வதை தடுக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று மத்திய மந்திரி பேசினார். சட்ட திருத்தமும் கூறியது. அந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்து பேசியது அதிமுக சார்பில் நானும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மட்டுமே.

தி.மு.க உறுப்பினர்கள் ஒருவர் கூட இந்த கனிம வளங்கள் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் எதிர்த்து உரையாற்றவில்லை. இதனை நாடாளுமன்ற மாநிலங்களவையின் அன்றைய 2.8.2023 கனிம வளங்கள் சட்ட திருத்த மசோதா நடவடிக்கையில் தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்று அவை குறிப்பு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மு.க.ஸ்டாலின் அரசு எழுத்து பூர்வமாக சம்மதம் தெரிவித்த பின்னரே மத்திய அரசு ஏலம் அறிவித்தது. மு.க.ஸ்டாலின் அரசு ஒப்புதல் தெரிவித்த பின்னர் இரண்டு முறைகள் டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல் முறை சரியான ஏலத்தொகை வராத காரணத்தால் இரண்டாவது முறை ஏலம் அறிவிக்கப்பட்டது.

மக்கள் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் தி.மு.க அரசு தடுமாறியது. மக்கள் கோபத்தை திசை திருப்ப சட்டமன்றத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். எனவே, மாநில அரசின் முழு ஒப்புதலோடு சம்மதத்தோடும் முதல் முறை டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் அறிவிக்கப்பட்ட பிறகே இரண்டாம் ஏலம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய-மாநில அரசு மற்றும் நாடாளுமன்ற ஆவணங்கள் உறுதி செய்கின்றன.

நான் பேசாதவற்றையும் பேசியதாக திரித்துக் கூறும் தி.மு.க. தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். தி.மு.க. தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. புதுடெல்லி நாடாளுமன்றத்தில் 2.8.2023 அன்று இந்த கனிம வளங்கள் மசோதாவை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்காமல் இருந்து விட்டு, நாடகமாடுவது இனி தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்