காணாமல் போனவர்கள் பற்றிய புகார்கள் - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சுற்றறிக்கை
|காணாமல் போனவர்கள் பற்றிய புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை,
காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் மீது அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும், டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், காணாமல் போனவர்கள் குறித்து புகார் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் காணாமல் போன நபர்கள் அடிக்கடி சென்று வரும் இடங்கள் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதலில் ஈடுபட வேண்டும் என சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், காணாமல் போனவர்கள் குறித்த புகைப்படங்களை, விசாரணை அதிகாரி மற்றும் உறவினர்களின் தொடர்பு எண்களுடன், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஒட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். புகார் மீது உடனடியாக சி.எஸ்.ஆர். ரசீது வழங்கி, 24 மணி நேரத்தில் விசாரித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.