'திராவிடம்' விடுபட்ட விவகாரம்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களிடம் விசாரணை
|கவர்னர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை,
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. அதனுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் நடந்தது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா தொடங்கும்போது தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள். அப்போது, "நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்ட மிதில்..." இவ்வாறு முதல் இரண்டு வரிகளை பாடிய அந்த பெண்கள், 3-வது வரியான, "தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்.." என்ற வரியை படிக்க தொடங்கும் போது சற்று திணறலுக்குள்ளனார்கள். 3 வினாடிகள் திணறிய அந்த பெண்கள் அந்த வரியை தவிர்த்து விட்டு அடுத்து 4-வது வரியான, "தக்கசிறு பிறைநுதுலும் தரித்தநறுந் திலகமுமே.." -என்று அடுத்த வரிக்கு தாவி சென்று விட்டனர். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஏற்படுத்திய சர்ச்சையால் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை தூர்தர்ஷன் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "கவனகுறைவாக நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. இந்த விஷயத்தில் கவர்னருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த சலசலப்புக்கு வித்திட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கவர்னர் மாளிகை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.அதன் அடிப்படையில் சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் அந்த 3 பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, "நாங்கள் வேண்டுமென்று அந்த வரியை விடவில்லை. எங்களது கவனக்குறைவால் நடந்து விட்டது. ஒருவர் பாடியதை நாங்கள் பின் தொடர்ந்தோம். அவர் அந்த வரியை பதற்றத்தில் விட்டு விட்டார். நாங்களும் வேறுவழியின்றி பின் தொடர்ந்து அவருடன் சேர்ந்து பாடிவிட்டோம். அதற்காக மிகவும் வருந்துகிறோம். அதில் எந்தவித உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை. எனவே எங்களை மன்னிக்கவும்" என்று கேட்டுக்கொண்டனர். அப்போது அந்த பெண்களும் அழுது விட்டதாகவும் தெரிகிறது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தூர்தர்ஷன் சார்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கவர்னருக்கும் அனுப்பப்படும் என்று தெரிகிறது. அதேபோல் அந்த பெண்கள் மீது ஏதாவது நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.