< Back
தேசிய செய்திகள்
மத்திய சுற்றுலா துறை மந்திரியுடன் அமைச்சர் ராஜேந்திரன், திருச்சி சிவா எம்.பி. சந்திப்பு
தேசிய செய்திகள்

மத்திய சுற்றுலா துறை மந்திரியுடன் அமைச்சர் ராஜேந்திரன், திருச்சி சிவா எம்.பி. சந்திப்பு

தினத்தந்தி
|
28 Nov 2024 5:48 PM IST

மத்திய சுற்றுலா துறை மந்திரியை அமைச்சர் ராஜேந்திரன், திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் சந்தித்து பேசினர்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய சுற்றுலா துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய மந்திரியிடம் வழங்கினர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் இணைந்து இன்று (28.11.2024) மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை டெல்லியில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு சுற்றுலா துறை தொடர்பான கோரிக்கை மனுவினை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். கீழ்க்காணும் பல்வேறு திட்டங்களுக்கான நிதி உதவிகளை விரைவாக வழங்கிட கோரிக்கை விடுத்தார்.

ஸ்வதேஷ் தர்ஷன் (2.0):

1) சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கான ரூபாய் 30.02 கோடி.

2) நீலகிரி மாவட்டம் இயற்கை சுற்றுலா தலம் பைக்கராவில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்திடும், திட்டத்திற்கு ரூபாய் 28.3 கோடி ஒதுக்கீடு.

சிறப்பு நிதியுதவி (Special Assistance for State Capital Investment):

1. மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ. 99 கோடி ஒதுக்கீடு.

2. உதகமண்டலம் தேவலாவில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பூந்தோட்டம் அமைத்திட ரூ.72.58 கோடி.

3. ராமேஸ்வரத்தினை முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்திற்கு ரூ.99 கோடி.

பிரசாத் திட்டம்:

1. தமிழ்நாட்டில் அமையப்பட்டுள்ள எட்டு நவகிரக கோவில்களில் பிரசாத் திட்டத்தின் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.44.95 கோடி.

2. சுற்றுலா மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு 16 வது நிதிக்குழுவில் சுற்றுலா தலங்களில் உள்ள மராட்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் பாளையக்காரர்கள் எழுப்பிய பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்தல், புனரமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ.3,000 கோடியினை மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சியினை மேம்படுத்த ரூ.1200 கோடியினை வழங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு மத்திய மந்திரி தலையிட்டு தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை 16வது நிதிக் குழு மூலம் வழங்க உரிய அழுத்தத்தை தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் தமிழ்நாட்டில் சுற்றுலா தளங்களை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை உருவாக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்து கோரப்பட்டுள்ள அனைத்து நிதி உதவிகளையும் விரைவில் வழங்க வேண்டுகோள் விடுத்தார்.

இந்த் சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திரமோகன் மற்றும் சுற்றுலா துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்