< Back
மாநில செய்திகள்
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்: 2 பேர் மீது வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்: 2 பேர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
6 Dec 2024 7:25 AM IST

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. பெண் பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. கடந்த 1-ந்தேதி இரவு மலட்டாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அதன் கரையோரம் உள்ள திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம், அரசூர், காரப்பட்டு, இருவேல்பட்டு, ஆனத்தூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது.

இந்த நிலையில் வெள்ளநீரை வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் அதிகாாிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அரசூர் கூட்டு சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அமைச்சர் நேரில் வந்து எங்கள் குடியிருப்புகளை பார்வையிட்டால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கிராம மக்கள் கூறினர்.

இதையடுத்து அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் பழனி உள்ளிட்டோர் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கனமழையால் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக நாங்கள் பரிதவித்து வருகிறோம். குடிப்பதற்கு தண்ணீர், உணவு வழங்கவில்லை. அரசு அதிகாாிகளும் வந்து எங்களை பார்க்கவில்லை. இதுவரை எங்கள் குடியிருப்புகளை பார்வையிட வராமல் எங்கு சென்றீர்கள் என்று கூறி அமைச்சரிடம் வாக்குவாதம் செய்தனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த யாரோ சிலர் அருகில் கிடந்த சேற்றை வாரி அமைச்சர் மீது வீசினர். இதில் அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி ஆகியோரது சட்டைகளின் மீது சேறு பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் பலத்த பாதுகாப்புடன் அமைச்சரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. பெண் பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்ற ராமகிருஷ்ணன், பா.ஜ.க. பெண் பிரமுகர் விஜயராணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்