"ஆண்ட பரம்பரை.." - அமைச்சர் மூர்த்தியின் சர்ச்சை பேச்சு
|பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி உள்ளது.
மதுரை,
ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, "இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். பல வரலாறு மறைக்கப்பட்டு இருக்கிறது. அதை நீங்கள் தெளிவாக தெரிஞ்சுக்கோங்க. படிச்சுருக்கிறீங்க. இன்னைக்கு நாலு பேர் செத்துப் போனான், இரண்டு பேர் செத்துப்போனான். அதுக்கு ஒரு பெரிய இது பண்றான். ஆனால், சுதந்திரத்திற்காக இந்த சமுதாயம் 5 ஆயிரம் - 10 ஆயிரம் பேர் செத்து இருக்காங்கன்றதை நீங்கள் வரலாறை புரட்டி பார்க்க வேண்டும்.
அது வருகிற போது அந்த வரலாறுகளை எல்லாம் இந்த நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களிடத்தில் நான் தெளிவுபடுத்துகிறேன். ஏன்னு சொன்னீங்கன்னா, இன்றைக்கு ஒரு வரலாறு இருக்கு. அது அழகர்கோவிலாக இருந்தாலும் திருமோகூர் கோவிலாக இருந்தாலும் ஆங்கிலேயர்களுடைய பெரிய படையெடுப்பில் கொள்ளையடித்து செல்லுகிற போது, இந்த சமுதாயம் தான் முன்னுக்கு நின்று ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் இறந்திருக்கிறான்.
இந்த வரலாறு இன்றைக்கு மறைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல உசிலம்பட்டி பக்கத்துல 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாங்கனு சொன்னால் கூட. இதற்கு எல்லாம் விவசாயத்துறையில் தொழில்துறையில் நம்மவர்கள் முன்னுக்கு இருந்தாலும் கூட படிப்பறிவில் அன்றைக்கு பின்தங்கி இருந்த காரணத்தினால், நம்முடைய வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது. அரசு வேலைவாய்ப்புகளில் நீங்கள் வந்து கொண்டு இருப்பதை மனதார பாராட்டுகிறேன்" என்று அவர் கூறினார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.