மழையால் சேதமடைந்த சாலைகள், மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு
|வால்டாக்ஸ் சாலையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சேதமடைந்த சாலைகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி சாலை, மத்திய கைலாஷ், எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பு, காரப்பாக்கம், துரைப்பாக்கம் மற்றும் ஒக்கியம் மடுவு பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் நீர்இறைப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டார்.
ஒக்கியம் மடுவு பகுதியில் ஏற்கனவே உள்ள 100 மீட்டர் நீளமுள்ள பாலத்தினை, 200 மீட்டர் நீளமுள்ள பாலமாக அமைக்கும் பணியினை பார்வையிட்டார். இந்த பாலப் பணியானது சென்னை மெட்ரோ ரெயில்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பல்லாவரம், துரைப்பாக்கம் சாலை மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக செல்லும் சாலையில் உள்ள 16 சிறு பாலங்கள் தூர்வாரும் பணியினை பார்வையிட்டார்.
தில்லை கங்கா நகர் வாகன சுரங்கப்பாதையில் நீர்இறைக்கும் பணிக்கான 300 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் மற்றும் 300 கி.வா. திறன் உள்ள ஜெனரேட்டர் மற்றும் அதன் இயங்கும் திறன் ஆகியவற்றை பார்வையிட்டு, 24x7 முழுநேரமும் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தினார்.
சென்னை உள்வட்ட சாலை விருகம்பாக்கம் நல்லா கால்வாயினை பார்வையிட்டார். இப்பகுதியில் மழைக்காலங்களில் ஓடும் நீர் சாலைமட்டத்தை விட உயர்ந்து செல்வதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை தவிர்க்க தக்க ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அமைச்சர் வலியுறுத்தினார்.
சென்னை, ஈ.வெ.ரா. சாலையில் சென்னை மாநகர காவல் அலுவலகம், ஆண்ட்ரூ சர்ச் பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் கட்டி முடிக்கப்பட்ட இணைப்பு கால்வாயும், அதனை தொடர்ந்து ரெயில்வே இருப்பு பாதையை கடந்து பக்கிங்காம் கால்வாய் சேரும் வகையில் அமைக்கப்பட்ட பாலத்தினை பார்வையிட்டார். வால்டாக்ஸ் சாலையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களை பார்வையிட்டார். நெடுஞ்சாலைத் துறை அனைத்து அலுவலர்களும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையிலும், கண்காணிப்புடன் இருக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.