< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை விவசாயிகள் சங்கத்துக்கு தேசிய நீர் மேலாண்மை விருது - அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து
மாநில செய்திகள்

புதுக்கோட்டை விவசாயிகள் சங்கத்துக்கு தேசிய நீர் மேலாண்மை விருது - அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து

தினத்தந்தி
|
23 Oct 2024 6:48 PM IST

தேசிய நீர் மேலாண்மை விருது பெற்ற புதுக்கோட்டை விவசாயிகள் சங்கத்துக்கு அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பரம்பூர் பெரிய கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்கு தேசிய நீர் மேலாண்மை விருது வழங்கப்பட்டது. இதனையொட்டி, இந்த சங்கத்தின் தலைவர், ஆட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் இன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"திருச்சி மண்டலம், தெற்கு வெள்ளாறு உபவடிநிலப் பகுதியில், தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை சட்டம், 2001-கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் பெரிய கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் சிறந்த நீர் மேலாண்மைக்காண ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தால் வழங்கப்படும் தேசிய நீர் விருது 2023-ற்கு மூன்றாவதாக தேர்வு செய்யப்பட்டு 22.10.2024 அன்று டெல்லியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விழாவில் விருது பெற்றனர்.

இவ்விருதினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் காண்பித்து இச்சங்கத்தின் தலைவர் ப.பொன்னையா, ஆட்சி மன்ற உறுப்பினர் ரா.பழனிசாமி மற்றும் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வே.கனிமொழி ஆகியோர் வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின்போது நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ௧.மணிவாசன், நீர்வளத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் சா.மன்மதன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்