மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து: தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் ...பிரேமலதா விஜயகாந்த்
|ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகின்றது.
இதில் 3வது யூனிட்டுக்கு நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும் 'பங்கர் டாப்' எனப்படும் பகுதி நிலக்கரியை, அரவைக்கு முன்பு சேகரிக்கும் இடம் தரை மட்டத்தில் இருந்து சுமார் 100 அடிக்கு மேல் உள்ளது. நேற்று மாலையில் திடீரென பங்கர் டாப், அந்த அமைப்புடன் சரிந்து கீழே விழுந்துள்ளது. 350 டன் நிலக்கரி குவியல் கொட்டியதில் 2 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலியானார்கள், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பும், பாதுகாப்பு உபகரணங்களும் இந்த அரசு செய்வது இல்லை. அவர்கள் மிக உயரமான இடத்தில் இருந்து வேலை செய்யும் போது, நிலக்கரியில் சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் அங்கு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. எனவே இந்த அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.
இந்த விபத்திற்கான காரணம் நிர்வாக சீர்கேடு, 40 கோடிக்கு மேல் ஊழல் புகார் இருக்கின்றது. எனவே இந்த விபத்து குறித்தும், மரணங்கள் குறித்தும் தனி ஆணையம் அமைத்து முறையாக விசாரணை செய்ய வேண்டும். இந்த விபத்தை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது, பல ஆண்டுகளாக பலமுறை முறையிட்டும் யாரும் அதை செவி சாய்க்காததினால், மாபெரும் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.என தெரியவித்துள்ளார்.