எம்.பி.பி.எஸ். மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற 23-ம் தேதி வரை அவகாசம்
|எம்.பி.பி.எஸ். மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற 23-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தேசியமருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். நடப்பாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்.எம்.சி. (NMC) இணையத்தில் பதிவேற்ற கடந்த 8-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அது தற்போது, வரும் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. அதற்கான அவகாசம் ஏற்கெனவே ஒரு முறை நீட்டிக்கப்பட்டு அதுவும்,கடந்த 8-ம் தேதியுடன் நிறைவடைந்தது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அந்த அவகாசத்தை வரும் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.