தமிழகத்தில் அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவு
|தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, 'பெஞ்சல்' என்ற பெயருடன் வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்தது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய 'பெஞ்சல்' புயல், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், புதுச்சேரிக்கு அருகே நேற்று முன்தினம் இரவில் இருந்து 'பெஞ்சல்' புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் 'பெஞ்சல்' புயல் நிலப்பகுதியில் கரையேறியும் வலு குறையாமல் புதுச்சேரியில் நகராமல் நின்று புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் மழையை கொட்டித் தீர்த்தது. அந்த பகுதிகளில் எல்லாம் இதுவரை இல்லாத மழைப்பதிவாக அது பதிவானது. அதன்பின்னர், நேற்று காலை 11.30 மணிக்கு பிறகு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின்னர் இரவுக்குள் தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனிடையே கனமழை எதிரொலியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தமுள்ள 909 ஏரிகளில், 309 ஏரிகள் முழு கொள்ளவை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 196 ஏரிகள் நிரம்பி உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரூரில் 33 செ.மீ., கள்ளக்குறிச்சி திருப்பாலபந்தலில் 32 செ.மீ., கள்ளக்குறிச்சி மாதம்பூண்டியில் 31 செ.மீ., வேங்கூரில் 27 செ.மீ., திருக்கோவிலூரில் 26 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.