மருது பாண்டியர்கள் நினைவு நாள்: தலைவர்கள் புகழாரம்
|மருது பாண்டியர்கள் நினைவு நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
சென்னை,
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மருது பாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், "அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற சிவகங்கைச் சீமையின் தீரர்களான மருதிருவரைப் போற்றுகிறேன்!.. விடுதலை மற்றும் தியாகத்தின் அடையாளங்களாக வாழ்ந்து, இந்த மண்ணுக்கு உரமாகியுள்ள மருது சகோதரர்களின் போராட்டமும் வீரமும் மக்கள் மனங்களில் என்றும் வாழும்!" என்று அதில் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில், "ஆங்கிலேய அரசுக்கு எதிரான முதல் பிரகடனமாம் "ஜம்பு தீவு பிரகடனம்" அறிவித்து, நாட்டின் விடுதலைக்காக போராடி அனைவரது நெஞ்சங்களிலும் விடுதலை வேட்கையை விதைத்து, வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர்_மருதுபாண்டியர்கள் அவர்களின் 223-வது நினைவு தினம் மற்றும் குருபூஜையையொட்டி அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும், வணங்கி போற்றுகிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.