< Back
மாநில செய்திகள்
காங்கிரசின் தூண்களாக விளங்கியவர்கள் மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் -  மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
மாநில செய்திகள்

காங்கிரசின் தூண்களாக விளங்கியவர்கள் மன்மோகன் சிங், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

தினத்தந்தி
|
7 Jan 2025 2:59 PM IST

மன்மோகன் சிங் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தூண்களாக விளங்கியவர்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.1.2025) சென்னை, காமராஜர் அரங்கில் இந்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரது உருவப்படங்களை திறந்துவைத்து புகழஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் கூறியதாவது;-

"இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவில் மாபெரும் தூணாக இருந்தவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக விளங்கிக்கொண்டிருந்தவர் மதிப்பிற்குரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இரண்டு முக்கியமான தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்திருக்கிறோம். இருவருடைய இழப்பும் பெரிய இழப்பாகும். நாட்டுக்காக மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் இருவரையும் அறிந்தவன் என்ற முறையில் எனக்கும் இது தனிப்பட்ட இழப்புதான்!

டாக்டர் மன்மோகன் சிங் பிறவி அரசியல்வாதி அல்ல. ஆனால், இளங்கோவன் பாரம்பரியமிக்க ஒரு அரசியல் குடும்பத்தை சார்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பேரனாக, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் அவர்களுடைய மகனாக! இப்படி ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்து இறுதி வரை அரசியல் வானில் வலம் வந்தவர்.

இன்னும் சொல்லவேண்டும் என்றால், டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் அமைச்சரவையில், அமைச்சராகவும் இடம்பெற்றிருந்தவர் நம்முடைய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றியவர். இருபெருந்தலைவர்களை நாம் இன்றைக்கு இழந்திருக்கிறோம். டாக்டர் மன்மோகன் சிங் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகப் பொருளாதார மேதைகளில் ஒருவராக மதிக்கப்பட்டவர்.

அவர் நினைத்திருந்தால், எந்தக் கவலைகளும் இல்லாத பரபரப்பு இல்லாத வாழ்க்கையை அவரால் வாழ்ந்திருக்க முடியும். அவரைப் போன்ற பொருளாதார மேதைகள், சிந்தனையாளர்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக அரசியலில் நுழைந்து நிதி மந்திரியாக அவர் பொறுப்பேற்றார். அதுவும், மிக நெருக்கடியான நேரத்தில் அந்த பொறுப்பை ஏற்று இந்திய நாட்டின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார். அவர் உருவாக்கிக் கொடுத்த பொருளாதாரத் திட்டங்கள்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

வலிமை வாய்ந்த அரசியல் தலைவராக இல்லாத, ஆக விரும்பாத, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத டாக்டர் மன்மோகன் அவர்கள், ஒரு முறையல்ல, இரண்டு முறை, மொத்தம் பத்து ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்து அவர் ஆட்சியை நடத்திக் காட்டியிருக்கிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் பல்வேறுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவைகள் எல்லாம் எண்ணில் அடங்காதது! ஒவ்வொன்றும் மகத்தானவையாக அமைந்தது!

• மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்

• மகளிருக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்கச் சட்டம்,

• தகவல் அறியும் உரிமைச் சட்டம்,

• கல்வி பெறும் உரிமைச் சட்டம்,

• உணவுப் பாதுகாப்புச் சட்டம்,

• லோக்பால் அமைப்புச் சட்டம்,

• வன உரிமைகள் அங்கீகரிப்புச் சட்டம்,

• நிலம் கையகப்படுத்தப்பட்டால் நியாயமான இழப்பீடுகளை வழங்கும் சட்டம்,

• கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம்,

• மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் அவரது ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது.

• ஆதார் அட்டைகள்

• இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான 3ஜி தகவல் தொழில்நுட்பம்.

• 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி - இப்படி பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள். பத்தாண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில், 21 தமிழர்கள் ஒன்றிய அமைச்சர்களாக இடம் பெற்றிருந்தார்கள். 8 கேபினட் அமைச்சர்கள், 13 இணை அமைச்சர்கள் என்று மிக அதிக அளவில் தமிழர்கள் ஒன்றிய அரசில் கோலோச்சியது அவருடைய அமைச்சரவையில்தான். அதுவும் மிகமிக முக்கியமான பல துறைகளை தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது. அதன் மூலமாக எண்ணற்ற திட்டங்கள் நமக்கு கிடைத்தன. நமது நூற்றாண்டு கோரிக்கையான தமிழ் செம்மொழி என்பதை அறிவித்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர்தான் மன்மோகன் அவர்கள்.

• சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

• சேலத்தில் புதிய இரயில்வே கோட்டம்.

• தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

• சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு.

• திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்.

• கடல்சார் தேசிய பல்கலைக் கழகம்.

• 3 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு.

• ஒரகடத்தில் ஒன்றிய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை ஆராய்ச்சி மையம்.

• 1,553 கோடி ரூபாய் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.

• சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்.

• நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

• சென்னை மாநகரில் மெட்ரோ இரயில்.

• ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.

• 6,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலை.

• தமிழ்நாட்டில் நீண்ட கோரிக்கையாக இருந்த சேது சமுத்திர திட்டம் தொடக்கம். இப்படி எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரக் காரணமாகயிருந்தவர்தான் மன்மோகன் சிங்.

தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் நெருங்கிப் பழகி, நட்போடு அவர் இருந்தது யாராலும் மறுக்க முடியாது. அதுதான் இத்தனை திட்டங்களை தமிழ்நாட்டிற்கு நாம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறோம். மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தியிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்கள், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதி செய்தார். அந்த வகையில் பார்த்தால், மன்மோகன் சிங் அவர்களின் இறப்பு என்பது தமிழ்நாட்டிற்கு பெரும் இழப்பு என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.

நண்பர் மதிப்பிற்குரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுடைய மறைவு என்பது என்னால் தாங்கி கொள்ள முடியாத இழப்பு. என்னை எப்போது சந்திக்க வந்தாலும் 'உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது' என்றுதான் கேட்பார்.

நானும் திரும்ப அவரிடத்தில் அதை தான் கேட்பேன். "நீங்கள் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்"-என்றுதான் சொல்வேன். சொன்னார், 'நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னை எம்.எல்.ஏ.-ஆக ஆக்கி இருக்கிறீர்கள், அந்த நம்பிக்கையை நிச்சயமாக காப்பாற்றுவேன், உழைப்பேன் உழைப்பேன்'-என்று உறுதியுடன் கூறினார். ஆனால், உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்கு சென்றபோதும், அவருடைய வீட்டாரிடத்தில் சொல்லியிருக்கிறார். 'என்னைச் சந்திக்க வேண்டும்'-என்று அவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லியிருக்கிறார்.

இந்த செய்தி கிடைத்தவுடன் நான் உடனடியாக, மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். ஆனால், அவர் பேச முடியாத நிலையில் இருந்தார். ஏதோ சொல்ல முற்பட்டார். ஆனால், அவரால் பேச முடியவில்லை. அதைத்தான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன். அவரது மகன் ஈ.வெ.ரா மறைந்தபோது நான் வேதனைப்பட்டேன், மனம் உடைந்து போனேன். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். மகன் மறைந்ததால் இளங்கோவன் அவர்கள் போட்டியிட்டு, அவர் வெற்றி பெற்று அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால், அந்த மகிழ்ச்சியும் நீடிக்காத வகையில் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அதனால்தான் தாங்கிக்கொள்ள முடியாத இழப்பு என்று நான் கூறினேன்.

தந்தை பெரியார் குடும்பத்தின் பெருஞ்செல்வம் மட்டுமல்ல - அவருடைய தந்தையார் ஈ.வெ.கி.சம்பத் அவர்கள் பேரறிஞர் அண்ணாவுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் நெருக்கமான நண்பராக, தோழராக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு சம்பத் விலகிய பிறகும், அவரை பேரறிஞர் அண்ணா விமர்சிக்கவில்லை. அதேபோல் சில நேரங்களில் இளங்கோவனும் கலைஞரை அரசியல் சூழல் காரணமாக விமர்சிப்பார். ஆனால், கலைஞர், அவரைப்பற்றி எதுவும் பேச மாட்டார். காரணம், 'சம்பத் பையன்தானே'-பேசட்டும் என்று பெருந்தன்மையோடு இருப்பார்.

மனதில் உள்ளதை மறைக்காமல் – அதே நேரத்தில் துணிச்சலாக - தெளிவாக – எதைப் பற்றியும் கவலைப்படாமல், தயக்கம் இல்லாமல் பேசக் கூடியவர்தான் நம்முடைய திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். ஆதரித்தாலும் சரி – எதிர்த்தாலும் சரி அதைச் சரியாக, உறுதியாக செய்யக் கூடியவர் நம்முடைய இளங்கோவன்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மிகத் தெளிவாக மேடைகளில் அவர் விளக்கிப் பேசினார். அதைவிட மற்றொன்றையும் கூறினார். "இதுதான் உண்மையான காமராசர் ஆட்சி"-என்று வெளிப்படையாக கூறியவர்தான் அவர்.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் எவ்வளவு நெருக்கடியான நேரத்திலும் நாடாளுமன்றப் பணிகளில் பங்கெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு பங்கெடுத்து பதிலும் அளித்திருக்கிறார். வயது முதிர்ந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தவர் நம்முடைய மன்மோகன் சிங்.

இப்படிப்பட்ட இரு தலைவர்களை நாம் இழந்திருக்கிறோம். ஆகவே, என்னுடைய புகழஞ்சலியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்து, என் புகழுரையை நிறைவு செய்கிறேன்!"

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்