
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சென்னை,
சென்னை அடையார் மாவட்ட போலீசாருக்கு நேற்றைய காலைப்பொழுது சோதனையாக அமைந்தது. இந்த போலீஸ் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இடங்களில் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான ஒரு மணி நேரத்தில் 6 இடங்களில் அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றதால் அடையார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
வழிப்பறி சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 6 இடங்களிலும் கைவரிசை காட்டியது 2 பேர் அடங்கிய ஒரே கும்பல் என்பது அடையாளம் தெரிந்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் ஹெல்மெட் மற்றும் முகமூடியும், பின்னால் அமர்ந்திருந்தவர் தொப்பி மற்றும் முகமூடியும் அணிந்திருந்தனர். அவர்கள் வந்த வாகன எண்ணை போலீசார் ஆய்வு செய்ததில் அது போலியான பதிவெண் என்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் வாகனத்தின் நிறம் மற்றும் அவர்கள் அணிந்திருந்த உடை மூலம் அவர்கள் சென்ற இடங்களை கண்காணிப்பு கேமராக்கள் வரிசையாக காட்டி கொடுத்தது. 6 பெண்களிடம் 27 பவுன் நகைகளை வழிப்பறி செய்த அவர்கள் எந்தவித பதற்றமும் இல்லாமல் விமான நிலையத்தை நோக்கி சென்றதும், அங்கு அவர்கள் வழிப்பறி செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு விமான நிலையத்துக்கு உள்ளே செல்லும் காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
அவர்கள், கைவரிசை காட்டிய நகைகளுடன் விமானம் மூலம் ஐதராபாத் தப்பி செல்ல 'போர்டிங் பாஸ்' வாங்கி கொண்டு விமானத்தில் ஏறுவதற்கு காத்திருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து நிலையத்துக்கு விரைந்த போலீசார் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இரானிய கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு, விமான நிலையத்தில் கைதான ஜாபர் குலாம் ஹுசைன் (26), போலீஸ் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தரமணி ரெயில் நிலையம் அருகே பதுக்கப்பட்ட நகைகளை மீட்க அழைத்துச் செல்லும் போது, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் ஜாபர் குலாம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ஜாபர் குலாமிடம் இருந்த பைக், கை துப்பாக்கி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மராட்டியத்தைச் சேர்ந்த ஜாபர் குலாம் மீது பல மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜாபர் குலாம் தான் இந்த செயின் பறிப்பு சம்பவங்களில் மூளையாக செயல்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பிய சல்மான் என்பவரை போலீசார் நெல்லூர் அருகே சுற்றி வளைத்து கைது செய்து,சென்னை அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.