< Back
மாநில செய்திகள்
பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

தினத்தந்தி
|
15 Oct 2024 5:30 AM IST

தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 22-ந் தேதி வள்ளியூர் வரை மட்டும் இயக்கப்படும்.

மதுரை,

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி-பணகுடி இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 20691) வருகிற 22-ந் தேதி வள்ளியூர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.20692) வருகிற 23-ந் தேதி வள்ளியூரில் இருந்து வழக்கமான நேரத்துக்கு தாம்பரம் புறப்பட்டு செல்லும்.

திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 22627) வருகிற 23-ந் தேதி நெல்லையுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.22628) வருகிற 23-ந் தேதி நெல்லையில் இருந்து வழக்கமான நேரத்துக்கு திருச்சி புறப்பட்டு செல்லும்.

மதுரையில் இருந்து நாகர்கோவில் வழியாக புனலூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16729) வருகிற 24-ந் தேதி நெல்லையுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16730) வருகிற 25-ந் தேதி நெல்லையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு வழக்கமான நேரத்தில் மதுரை புறப்பட்டு வரும்.

கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக ராமேசுவரம் வரை செல்லும் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 22622) வருகிற 24-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக வள்ளியூரில் இருந்து வழக்கமான நேரத்துக்கு ராமேசுவரம் புறப்படும்.

இதனால் இந்த ரெயில்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அத்துடன், மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களை மேற்கண்ட நாட்களில் மட்டும் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக புனலூர் மற்றும் திருவனந்தபுரம் வரை இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்