< Back
மாநில செய்திகள்
மதுரையில் பரபரப்பு: கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு உடல்நலம் பாதிப்பு: மருத்துவமனையில் சிகிச்சை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

மதுரையில் பரபரப்பு: 'கிரில் சிக்கன்' சாப்பிட்ட 22 பேருக்கு உடல்நலம் பாதிப்பு: மருத்துவமனையில் சிகிச்சை

தினத்தந்தி
|
6 Feb 2025 8:16 AM IST

மதுரை சோழவந்தானில் 'கிரில் சிக்கன்' சாப்பிட்ட பெண்கள் உள்பட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை பாலம் அருகே அசைவ ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் வாங்கி சிலர் சாப்பிட்டனர். சிலர் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்றனர். சோழவந்தானை சேர்ந்த பிரசன்னா என்பவர் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து அந்த ஓட்டலில் சிக்கன் வாங்கி சாப்பிட்டார். சிறிது நேரத்தில் 10 பேருக்கும் மயக்கம் ஏற்பட்டது.

மேலும் அந்த ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 3 வயது பெண் குழந்தை உட்பட 12 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதன்படி 22 பேருக்கும் திடீரென்று வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து அறிந்ததும் சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் முத்துராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், பூபன் சக்கரவர்த்தி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட பணியாளர்கள் சம்பந்தப்பட்ட தனியார் ஓட்டலில் அதிரடி ஆய்வு நடத்தினார்கள்.

சுகாதார குறைபாடு, பாலித்தீன் பொருள் பயன்பாட்டுக்காக அந்த ஓட்டலுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சவரிராஜ் தலைமையில் 9 வகையான பொருட்கள் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, மதுரை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 13 பேர் வீடு திரும்பினர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்