மதுரை மழை பாதிப்பு: நடவடிக்கை எடுக்க தே.மு.தி.க. கோரிக்கை
|தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் காக்க வேண்டியது அவசியம் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
மதுரை,
மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் கடுமையான மழைப்பொழிவு இருந்ததாகவும், காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மதுரையில் கனமழை பெய்ததால், சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மழை பாதிப்புகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக தூர்வாராததால் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, மருந்து வசதிகளை மாநகராட்சி செய்து தர வேண்டும். மதுரையில் ஓரிரு நாள் பெய்த மழைக்கே ஏன் இந்தளவு பாதிப்பு என்பதை ஆராய்ந்து மாநகராட்சி தெளிவுப்படுத்த வேண்டும்.
மதுரை மாநகராட்சியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் காக்க வேண்டியது அரசியல் கடமையாகும். மதுரையில் மழை பாதிப்பு குறித்து தமிழக அரசு விளக்கம் தர வேண்டும்" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.