
மதுரை
ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

திருமங்கலத்தில் ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் ரவுடி காளீஸ்வரன் 4 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் வெட்டியதாக கூறப்படுகிறது.
மதுரை தனக்கன்குளத்தில் தி.மு.க.வின் முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் ஆதரவாளராக காளீஸ்வரன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவமானது இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட காளீஸ்வரனின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சூழலில் காளீஸ்வரனின் ஆதரவாளர்கள் ஆம்புலன்சை சேதப்படுத்தி உள்ளனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காளீஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்விரோதம் காரணமாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.