மாதவரம் கைலாசநாதர் கோவில் திருப்பணி - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
|மாதவரம் கைலாசநாதர் கோவில் திருக்குள திருப்பணியை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
சென்னை,
சென்னை மாதவரம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் திருக்குளத் திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (21.12.2024) சென்னை, மாதவரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலை புதிய கருங்கல் கட்டுமான திருக்கோவிலாக கட்டுவது குறித்தும், வேணுகோபால் நகர், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருக்குள திருப்பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;-
'தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின், ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறவேண்டிய குடமுழுக்குகளை முறையாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு இதுவரை 2,363 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவிலான மாதவரம் அருள்மிகு மாரியம்மன் திருகோவிலுக்கு புதிதாக கருங்கல் கட்டுமானத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று ஊர்மக்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின்படி மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆய்வு மேற்கொண்டோம்.
இத்திருக்கோவில் கருங்கல் கட்டுமானத்திற்கு ரூ.1.50 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு, மாநில வல்லுனர் குழு மற்றும் தொல்லியல் குழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் ரூ.50 லட்சம் உபயதாரர் நிதியாக பெற்றுத் தருவதாகவும் மீதமுள்ள தொகை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மக்கள் கேட்டதெல்லாம் செய்து தருகின்ற திராவிட மாடல் அரசு எஞ்சியுள்ள ரூ.1 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை துறையின் மூலம் செய்து கொடுக்கும். இத்திருப்பணி 2026 ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்திட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் மாதவரம் அருள்மிகு கற்பகாம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோவில் திருக்குளத் திருப்பணி ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அப்பணிகளை இன்றைய தினம் ஆய்வு செய்கின்ற போது இப்பணிக்கு கூடுதல் நிதி தேவை என சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார். அதனையும் ஏற்று கூடுதல் நிதியை வழங்கி வருகின்ற 2025 மே மாதத்திற்குள் நிறைவு செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும்.
நீர் ஆதாரங்கள் பாதுகாக்கவும், நிலத்தடி நீர் உயர்த்திடவும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பயன்படுத்துகின்ற வகையிலும் திருக்குளங்கள் சீரமைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.3 கோடி மதிப்பீட்டில் 4 புதிய குளங்கள் அமைக்கவும், 220 திருக்குளங்கள் ரூ.120.33 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கின்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள், அன்னதான கூடங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள், முடி காணிக்கை மண்டபம் என அனைத்திலும் தனி கவனம் செலுத்தி பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்கின்ற ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்கிறது.
திருக்கோவில்களுக்கு வருவாய் ஈட்டுகின்ற வகையில் அங்கு பயன்பாட்டிலில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் ஓய்வு பெற்ற நீதியரசர்கள் முன்னிலையில் பிரித்தெடுக்கப்பட்டு ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி பாரத ஸ்டேட் வங்கியில் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 23 திருக்கோவில்களில் பிரித்து பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்களில் 13 திருக்கோவில்களில் பொன் இனங்கள் உருக்கி தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த வாரம் ஆனைமலை, பழனி, குணசீலம் ஆகிய திருக்கோவில்களின் பலமாற்றுப் பொன் இனங்கள் மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளன. வரும் 27-ந்தேதி சமயபுரம் திருக்கோவிலின் சுமார் 526 கிலோ பலமாற்றுப் பொன் இனங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
திருக்கோவில்களின் உண்டியல்களில் எந்த பொருள் விழுந்தாலும் அதனை சுவாமியின் கணக்கில்தான் வரவு வைப்பார்கள். இதற்கு ஏதாவது விதிவிலக்கு இருக்கிறதா என்று சட்டப்படி ஆராய்ந்து, அப்படி இருப்பின் அதற்கேற்ற நிவாரணம் வழங்குவதற்குண்டான சாத்திய கூறுகள் இருப்பின் அதுகுறித்து துறை அலுவலர்களுடன் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.'
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் ரா.சுகுமார், இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, உதவி ஆணையர் க.சிவக்குமார், திருக்கோவில் செயல் அலுவலர்கள் எஸ்.நித்யகலா, பி.சண்முகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.