காதல் தோல்வி... பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|காதல் தோல்வியால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள திருநல்லூர் சதுர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவருடைய மனைவி மாரிக்கண்ணு. இவர்களுடைய மகள் பிரசன்னா. பி.எஸ்சி., பட்டதாரியான இவர், தஞ்சை மாதாக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
சாமிக்கண்ணு வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் மாரிக்கண்ணும் அவரது மகள் பிரசன்னாவும் வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக பிரசன்னா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரசன்னா வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரசன்னாவின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரசன்னா காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.