
வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை

வைகுண்டர் அவதார தினத்தன்று விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது'
"சமூகத்தில், ஏற்றத்தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்பதைப் போதித்த அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தினம், வரும் மார்ச் 4 அன்று கொண்டாடப்படுகிறது.
அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்காக, ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுடன், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அதிகம் உள்ள தென்மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்துக்கும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென்று, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், அன்பையும், ஆன்மீகத்தையும், வலியுறுத்திய அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று, மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் சார்பாக, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.