எல்.ஐ.சி. தமிழ் இணையதளத்தை உருவாக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
|தமிழ் இணையதளத்தை உருவாக்க மத்திய அரசு மற்றும் எல்.ஐ.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டத்திற்குப் பிறகு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது மொழிப் போருக்குந்தான். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இந்தித் திணிப்பிற்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட்டது என்பது வரலாறு. இதன் விளைவாக இன்று வரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. "இந்தி மொழியை தாங்களாகவே மனமுவந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம்; அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்றும் கூறியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரைக்கேற்ப, இருமொழிக் கொள்கையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் உறுதியாக இருந்தார்கள் மத்திய அரசு எப்பொழுதெல்லாம் இந்தி திணிப்பு முயற்சியை மேற்கொள்கிறதோ அப்பொழுதெல்லாம் அதற்கு எதிராக குரல் எழுப்பியர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (Life Insurance Corporation of india) இணையதள முகப்பு என்பது இதுநாள் வரை ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது இந்தியில் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக இணையதளத்திற்குள் சென்றவுடன் அனைத்தும் இந்தி மொழியில்தான் இருக்கின்றன.
இது நெரியாததன் காரணமாக, இணையதளத்தை பார்க்க முடியாத சூழ்நிலை தமிழக மக்களுக்கு, இந்தி மொழி தெரியாத மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது ஒருவிதமான இந்தி திணிப்பு, எனவே, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் இணையதள முகப்பினை உடனடியாக ஆங்கில மொழிக்கு மாற்றவும். தமிழ் இணையதளத்தை உருவாக்கவும் மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.