'உயர்கல்வித்துறையில் கவர்னரின் குறுக்கீடு தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை' - அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
|கவர்னரின் குறுக்கீடு தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
உயர்கல்வித்துறையின் செயல்பாடுகளில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் குறுக்கீடு தொடர்ந்தால் அடுத்தகட்டமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"தமிழ்நாடு அரசை பொறுத்தவரை உயர்கல்வித்துறையில் கவர்னரின் குறுக்கீடுகளை அவ்வப்போது அறிக்கைகள் மூலமாகவும், கோப்புகள் மூலமாகவும் சுட்டிக்காட்டி வருகிறோம். இதன் பிறகும் அதே நிலையை கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்தார் என்றால், முதல்-அமைச்சரோடு கலந்து பேசி அடுத்தகட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
அவரது செயல்பாடுகளை வரையறுக்க வேண்டிய கட்டம் தமிழக அரசுக்கு வரும். அந்த கட்டத்தை கவர்னர் எட்டாமல் இருப்பது அவரது பதவிக்கு அழகு. தமிழ்நாட்டை சீனா, ஜப்பான், தைவான் போன்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கு பெருமுயற்சி எடுத்து வருகிறோம். அதற்கான கல்வி திட்டங்கள் உருவாக்கப்படும். எதிர்வரும் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.