தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை - அர்ஜுன் சம்பத்
|தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
அம்பை,
நெல்லை மாவட்டம் அம்பையில், இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அம்பை காசிநாதர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்து விட்டது. உடனடியாக கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அம்பை நகராட்சி பகுதிகளில் மத்திய அரசின் திட்டமான குடிநீர் அபிவிருத்தி பணிகளுக்கான தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்திரை மாதம் 1-ந் தேதி தான் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டை புறக்கணிக்க வேண்டும். பொங்கல் பண்டிகை இந்துக்கள் சமயம் சார்ந்த பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகையின் போது கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. தென் மாவட்டங்களில் மத்திய அரசின் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களையும் தி.மு.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தடுக்கிறார்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைத்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.