பள்ளிக்கூடம் வந்தபோது வயிற்று வலி: 11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்ததால் அதிர்ச்சி
|பள்ளிக்கூடம் வந்தபோது 11-ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட வயிற்று வலியை தொடர்ந்து அவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மதிய இடைவேளையின்போது அந்த மாணவி சக மாணவிகளிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது மாணவி திடீரென வயிற்று வலியால் அலறி துடித்தார். இதை பார்த்து மாணவிகள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியைகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி நிறைமாத கர்ப்பமாக இருந்ததும், பிரசவ வலி ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்த மாணவி பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அரசு மருத்துவமனைக்கு நாமக்கல் குழந்தைகள் காப்பக அலுவலர்கள் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் உறவினர் ஒருவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கர்ப்பமாக்கிய உறவினர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.