< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

சுற்றுலாத்துறையின் சமூக வலைதளப்பக்கத்தில் குலசை தசரா திருவிழா புகைப்படம், வீடியோ காட்சிகள்

தினத்தந்தி
|
18 Nov 2024 9:40 AM IST

தசரா திருவிழா சூரசம்ஹாரத்தில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை,

தசரா திருவிழா என்றாலே, குலசேகரன்பட்டினம்தான் நினைவுக்கு வரும். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கடற்கரை கிராமம்தான் இந்த குலசேகரன்பட்டினம். இங்குள்ள முத்தாரம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழாவின்போது குலசேகரன்பட்டினத்தில் மகிஷாசுரனை, முத்தாரம்மன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும். இந்த விழாவை பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தருவார்கள். விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வித விதமான வேடங்களை அணிந்து வலம் வருவார்கள். அதில் ஆண்கள் பெரும்பாலானோர் காளி வேடமிட்டு இருப்பார்கள்.

அந்த வகையில் கடந்த மாதம் (அக்டோபர்) குலசேகரன்பட்டினத்தில் தசரா விழா வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா குறித்த வீடியோ காட்சிகள் தற்போது பல்வேறு வலைதளப் பக்கங்களில் உலா வருவதை பார்க்க முடியும்.

அந்த வரிசையில் குலசை தசரா திருவிழா குறித்து புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிப் பதிவுகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் பகிர்ந்து வருகிறது. அதாவது, தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் முகநூல் (பேஸ்புக்), எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் இந்த வீடியோ வைரல் ஆகிறது. அதனை பலரும் தங்களுடைய வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை தமிழ்நாடு சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, ''ஒளிரும், தனித்துவமான, வண்ணமயமான குலசை தசரா'' என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்