கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது? ஐகோர்ட்டு கேள்வி
|எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை எதிர்த்தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க வேண்டும் எனக்கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சநதோஷ் சாமி மற்றும் தீபு சதீசன் ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமியை சாட்சிகளாக விசாரிக்க அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக ஏன் விசாரிக்கக் கூடாது என கேள்வியெழுப்பினார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை எதிர்த்தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து விரைவில் நீதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.