< Back
மாநில செய்திகள்
கோடநாடு வழக்கு: ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு: ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

தினத்தந்தி
|
7 March 2025 9:45 AM IST

கோடநாடு வழக்கில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், ஜிதின் ஜாய், சம்சீர் அலி, மனோஜ் சாமி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகிறார்கள். 250-க்கும் மேற்பட்டவர்களை கோவையில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜன் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சம்பவம் நடந்த அன்று அவர் எங்கு இருந்தார்? எத்தனை மணிக்கு எஸ்டேட்டுக்கு சென்று பார்த்தார்?. என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது? மீதி ஏதாவது பொருட்கள் இருந்ததா? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகளுக்கு எல்லாம் அவர் பதில் அளித்தார். அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மீண்டும் தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்போம் என்றும், அதற்கு தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் போலீசார் கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், கோடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 11-ம் தேதி வீரபெருமாள் விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி. உத்தரவிட்டுள்ளது. அப்போதைய பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ், இறுதியாக விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அவர் தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்தும் உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது

மேலும் செய்திகள்