கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
|கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. முதல் ரெயில் 12-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.15 மணி அளவில் விழுப்புரம் ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரெயில் 13-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் ஜங்சனுக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும்.
அதேபோல் மற்றொரு ரெயில் விழுப்புரம் ஜங்ஷனிலிருந்து 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.25 மணிக்கு புறப்பட்டு காலை 11.10 மணியளவில் திருவண்ணாமலையை சென்றடையும். பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். இந்த நேர அடிப்படையில் 15-ந் தேதி வரை ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதேபோல் மற்றொரு சிறப்பு ரெயில் திருச்சியில் இருந்து 13-ந் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு மதியம் 1.25 மணிக்கு வந்தடையும். பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 2.50 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
அதனை தொடர்ந்து அந்த ரெயில் வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.25 க்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு 14-ம் தேதி அதிகாலை 7.20 மணிக்கு திருச்சியை சென்று சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.