கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் நாளை முதல் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
|திருச்செந்தூரில் நாளை முதல் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 8-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய இரு நாட்கள் திருச்செந்தூர் பகுதி வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அன்றைய தினங்களில் திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களை தவிர்த்து ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக உவரி மார்க்கமாக கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் பாதையை தவிர்த்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தூத்துக்குடியிலிருந்து நெல்லை மார்க்கமாக உவரி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லவும்.
அதேபோன்று கன்னியாகுமரியில் இருந்து வரும் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் பாதையை தவிர்த்து நெல்லை மார்க்கமாக உவரி வழியாக வரவேண்டும். எனவே கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு அனைத்து வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.