< Back
மாநில செய்திகள்
சொந்த ஊருக்கு அருகிலே கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு பணி - ராமதாஸ் வலியுறுத்தல்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சொந்த ஊருக்கு அருகிலே கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு பணி - ராமதாஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
25 Nov 2024 11:31 AM IST

கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு சங்கப் பணியாளர்களில் பெரும்பான்மையினருக்கு அவர்களின் சொந்த ஊர்கள் மற்றும் வசிப்பிடத்திலிருந்து 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியாளர்களில் பெரும்பான்மையானவர்கள் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்; குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். அவர்களால் ஒவ்வொரு நாளும் 100 கி.மீ தொலைவுக்கு சென்று வருவது சாத்தியமில்லை. கூட்டுறவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு என்பதால் அவர்களால் பணி செய்யும் இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குவதும் சாத்தியமில்லை.

நியாயவிலைக்கடை பணியாளர்கள், கட்டுனர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படும் போது அவர்களின் வசிப்பிட தொலைவு கருத்தில் கொள்ளப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். தொலைதூரத்தில் பணியாற்றும் பணியாளர்கள் இயன்றவரை தங்களின் வசிப்பிடத்திற்கு அருகில் பணியிட மாற்றம் வழங்கும்படி மாவட்ட இணைப்பதிவாளர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பது மிகவும் எளிதானது. 2024-ஆம் ஆண்டில் கூட்டுறவுப் பணியாளர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக, இருக்கும் காலிப் பணியிடங்களில், தொலைதூரங்களில் பணியாற்றும் பணியாளர்களை அவர்களின் விருப்பத்தை அறிந்து மாற்றி அமர்த்த வேண்டும். அதன்பின்னர் புதிய காலியிடங்களை கண்டறிந்து அவற்றுக்கு புதிய பணியாளர்களை தேர்வு செய்து நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்