< Back
மாநில செய்திகள்
ஜே.இ.இ. தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுகிறது - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

ஜே.இ.இ. தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுகிறது - தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு

தினத்தந்தி
|
19 Oct 2024 6:36 AM IST

ஜே.இ.இ. முதன்மை தேர்வு வினாத்தாளில் இனி 'ஆ' பிரிவு கேள்விகள் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி ஆகியவற்றில் இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கை, தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஜே.இ.இ. தேர்வானது, முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வுகளாக நடத்தப்படுகிறது.

இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ) கடந்த 2019-ம் ஆண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு குறித்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியிடப்படும். கொரோனா வைரஸ் பரவல் காலக்கட்டத்தில், ஜே.இ.இ. மெயின் தேர்வில் பகுதி-ஆ பிரிவில் 10 வினாக்கள் கொடுக்கப்பட்டு அதில் 5 வினாக்களுக்கு மாணவர்கள் விடை அளிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. பெருந்தொற்று காலம் என்பதால், மாணவர்களுக்கான இந்த நடைமுறையை தேசிய தேர்வுகள் முகமை தற்காலிகமாக நடைமுறைப்படுத்தியது.

உலக சுகாதார மையம் கொரோனா தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக கடந்த மே மாதம் 5-ந்தேதி அறிவித்தது. அதன் அடிப்படையில், ஜே.இ.இ. முதன்மை தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருப்ப கேள்விகள் நடைமுறை திரும்ப பெறப்படுகிறது. இனிவரும் நாட்களில், முன்பை போலவே வினாக்கள் இடம்பெறும். அந்தவகையில், முதன்மை தேர்வின் பகுதி-ஆ பிரிவில் 5 வினாக்கள் கேட்கப்படும். அந்த 5 வினாக்களுக்கும் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். தேர்வு நடைமுறை தொடர்பான, தகவல்கள் www.jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்