< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் மக்கள் மருந்தகம் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் மக்கள் மருந்தகம் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தினத்தந்தி
|
23 Dec 2024 6:05 PM IST

தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் மக்கள் மருந்தகம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (23.12.2024) சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வெள்ளி விழா கலையரங்கத்தில் நடைபெற்ற தேசிய மருந்தாளுநர் மாநாட்டில் அறிவியல் மலரினை வெளியிட்டார். பிறகு சிறந்த மருந்தாளுநர்களுக்கும், மருத்துவம் சார்ந்த பல்வேறு துறையில் உள்ள மருத்துவ வல்லுநர்களுக்கும் மற்றும் மருந்தியல் மாணவார்களுக்கும் பதக்கங்களையும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தார்.

பின்பு, அந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

தேசிய மருந்தாளுநர் மாநாடு:

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே முதன்முறையாக உலகின் பல்வேறு நாடுகளை ஒருங்கிணைத்து, உலகின் பல்வேறு மருத்துவ வல்லுநர்களை அறிவியல் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய மருத்துவ மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாடு இதுவரை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடத்தப்பட்டதில்லை. முதன்முறையாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மரு.நாராயணசாமி முன்னெடுப்பில் நடத்தப்பட்ட இம்மருத்துவ மாநாடு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற மாநாடாக அமைந்தது. அதேபோல் இதே இடத்தில் International Ayurveda Conference ஒன்று ஏற்கனவே மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று அவரவர்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து அம்மாநாடு மிகப்பெரிய வெற்றியினைப் பெற்றது. அதேபோல் National Dental Work shop ஒன்று கடந்த மாதம் இதே அரங்கில் நடைபெற்றது. தேசிய அளவில் பல் மருத்துவம் குறித்து மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் மூலம் அந்த மாநாடும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற மாநாடாக அமைந்தது. இன்று மருந்தியல் துறையின் தேசிய மாநாடு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், மருத்துவத்துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்றிருக்கும் இம்மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றியினை பெரும்.

இந்த மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட மருந்தியல் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை எனது மனம் கனிந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய புதிய மருந்து கண்டுபிடிகள் அரிதான நோய்களை குணப்படுத்துகிறது, புதிய புதிய மருந்து கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சி தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. புதிய நோய் பாதிப்புகள் இன்று உலகை அச்சுறுத்தி வருகிறது, 200 நாடுகளுக்கும் மேல் இந்திய மருந்து 100 சதவீதம் போய் உள்ளது, இந்திய மருந்துகளின் தேவை அதிகரித்து உள்ளது, உலகத்திற்கு எடுத்துகாட்டாக மருந்து துறையில் இந்தியா உள்ளது, அமெரிக்காவில் கூட பொது மருத்துவத்தின் (Generic Medicine) 40 சதவீத மருந்துகள் இந்தியாவில் தான் வாங்கப்படுகிறது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் இந்திய மருந்துகள் 30 சதவீத அளவில் உபயோக்கப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதல் - அமைமைச்சரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தற்போது தமிழ்நாட்டின் மருத்துவ திட்டத்தை நகல் எடுக்க தொடங்கி உள்ளன. மற்ற நாடுகளிலும் தமிழ்நாட்டின் மருத்துவ முறையை முன்னெடுக்க முனைந்துள்ளார்கள்.

திட்டங்கள்:

இந்த அரசு பொறுப்பேற்றபிறகு மருத்துவத்துறையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48, இதயம் காப்போம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம், பாதம் பாதுகாப்போம் திட்டம், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், ஒட்டுமொத்த மக்களுக்கும் புற்றுநோய் Screening திட்டம் என்று ஏராளமான திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அரசு பார்மஸி கல்லூரிகள் எண்ணிக்கை உயர்த்துவது

ஐநாவில் தொற்றா நோய்க்கான சிறந்த மருந்தை கொடுக்கும் மாநிலம் என தமிழ்நாட்டை கண்டறிந்து விருது வழங்கப்பட்டது, இது உலகின் உச்சபட்ச விருது. தொற்றா நோய் பாதிப்பு தமிழ்நாட்டில் கட்டுக்குள் உள்ளது, பெரிய உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. முதல் பார்மஸி கல்லூரி தொடங்கிய மாநிலம் தமிழ்நாடுதான். இன்று படித்த மாணவர்கள் உலகத்தில் சாதனை புரிந்து வலம் வருகின்றனர். தமிழ்நாட்டில் அரசு பார்மஸி கல்லூரிகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ள காரணத்தினால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, பார்மஸி கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு கல்லூரிகளில் படித்த எனக்கு அரசுதான் வேலை தர வேண்டும் என மனப்போக்கு மாணவர்களிடையே உள்ளது, அது தவறில்லை, ஏராளமான தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளது. அதனையும் மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். தற்போது படிக்கும் மருத்துவ மாணவர்களின் தகுதி, திறமையை கொண்டு படிப்பை முடித்த பின் அவர்களுக்கான காலி பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும்.

1000 இடங்களில் மக்கள் மருந்தகம்:

அண்மையில் 946 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் அனைவருக்கும் கலந்தாய்வு நடத்தி அவரவர் விரும்பும் இடங்களுக்கே பணி ஆணைகள் தரப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். இந்த அரசு பொறுப்பேற்றபிறகு 24,000 மருத்துவம் சார்ந்த பணிநியமனங்கள் முறையாக நடைபெற்றிருக்கிறது. மேலும் கலந்தாய்வு மூலம் 34,000த்திற்கும் மேற்பட்ட பணியிடமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. வரும் 05.01.2025 அன்று 2,553 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மக்கள் மருந்தகம் தமிழ்நாட்டில் 1000 இடங்களில் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். எனவே மக்கள் மருந்தகத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 Generic மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் அப்பணிகள் முடிவுற்றபிறகு முதலமைச்சரால் தமிழ்நாட்டில் 1000 மக்கள் மருந்தகங்கள் கூட்டுறவுத்துறையும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஒருங்கிணைந்து இச்சேவை தொடங்கப்படவிருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி, பதிவாளர் கே.சிவசங்கீதா, இந்திய மருந்தியல் கழகத்தின் (Indian Pharmaceutical Association) தலைவர் எஸ்.மணிவண்ணன், துணை தலைவர் ஜெ.ஜெயசீலன், மருந்தியல் கல்லூரியின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்