"அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை" - ரஜினிகாந்த்
|நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் - ஜானகியின் நினைவுகளை நடிகர் ரஜினிகாந்த் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தின் முதல் பெண் முதல்-அமைச்சரும், எம்.ஜி.ஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா, அ.தி.மு.க. சார்பில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுவரும் இந்த விழாவில், நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் அவர் வழங்கினார். அதனை தொடர்ந்து ஜானகி ராமச்சந்திரனின் திருவுருவப் படத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்தப்படம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது. மாலை 5 மணியளவில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்நிலையில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். - ஜானகியின் நினைவுகளை வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
இதுதொடர்பான அந்த வீடியோவில், "எம்.ஜி.ஆர். மறைந்தபிறகு ஜானகி அம்மையார் அரசியலுக்கு வந்தது பொலிடிக்கல் ஆக்சிடெண்ட். அவருக்கு ஈடுபாடு இல்லை. சூழ்நிலைக் கைதியாக அரசியலுக்கு வந்தார். ஜானகி மிகுந்த தைரியத்துடன் முடிவு எடுப்பவர். யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அரசியல் தனக்கு சரிபட்டு வராது. நீங்கள்தான் சரியானவர் என முடிவு செய்து, ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார்.
அ.தி.மு.க. நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி ராமச்சந்திரன். அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்ட போது, ஜெயலலிதா அம்மையாரிடம் கட்சியை ஒப்படைத்தது அவரின் நல்ல குணம், பக்குவத்தை உணர்த்தியது.
திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூறியதாக ஜானகி அம்மையார் என்னிடம் தெரிவித்தார். 2017-ல் நான் அரசியலுக்கு வருவதாக சொன்னேன். அப்போது நிறைய பேர் என்னை சந்தித்து ஆலோசனை சொன்னார்கள். அந்த ஆலோசனையெல்லாம் கேட்டால், நாம் நிம்மதியெல்லாம் இழந்து, எல்லாத்தையும் இழக்க வேண்டியது தான்.
அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை. அந்த இரட்டை இலை கிடைப்பதற்கு ஜானகி அம்மாள் மிகப் பெரும் தியாகம் செய்தார். அவருக்கு இந்த நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடுவதை வரவேற்கிறேன். இந்த விழாவுக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று அவர் கூறினார்.
ரஜினிகாந்த்தைத் தொடர்ந்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசிய வாழ்த்து வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.