
கோப்புப்படம்
ஜகபர் அலி கொலை வழக்கு; கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி

ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி. சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக போராடி வந்தார்.போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள், அவரை லாரி ஏற்றி கொலை செய்தனர்.மாநில அளவில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் ராமையா, ராசு, தினேஷ்குமார், முருகானந்தம், காசிநாதன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜகபர் அலியின் உடற்கூறாய்வு சரியாக செய்யப்படவில்லை அதனால் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஜகபர் அலியின் மனைவி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜகபர் அலி உடலைத் தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, பின்பற்றப்பட வேண்டிய சில விதிமுறைகளையும் கூறியிருந்தார். அதன்படி ஜகபர் அலி உடல் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதாகி உள்ள முருகானந்தம், காசிநாதன், ராசு, ராமையா, தினேஷ்குமார் ஆகிய ஐந்து நபர்களும் புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு இன்று மாற்றம் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் குற்றவாளிகள் ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனை விசாரித்த புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிபதி கொலை வழக்கில் கைதாகி உள்ள ஐந்து பேரையும் மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.