< Back
மாநில செய்திகள்
புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு பக்க சார்பாக செயல்படுவது அவமானகரமானது- சீமான்
மாநில செய்திகள்

புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு பக்க சார்பாக செயல்படுவது அவமானகரமானது- சீமான்

தினத்தந்தி
|
7 Jan 2025 5:24 PM IST

புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஒரு பக்க சார்பாக செயல்படுவது அவமானகரமானது என சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து, தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஒரு பக்க சார்பாக செயல்படுவது அவமானகரமானது. தம்பி பாலமுரளிவர்மன் தொகுத்த 'தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?' எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வில், 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகழ் நீயே என் தமிழ்த்தாயே!' எனும் பாடல் ஒலிக்கச் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அபத்தமானது. அது புரட்சிப்பாவலர் பாரதிதாசன் எழுதிய வாழ்த்துப்பா! அப்பாடல் புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்தாக இருப்பதாலேயே, தமிழ்நாட்டில் ஒலிக்கச் செய்யக்கூடாதென்பது அடிப்படையே இல்லாததாகும். புத்தக வெளியீட்டு நிகழ்வு என்பது அரசு நடத்தும் நிகழ்வல்ல எனும்போது அரசின் அரசாணை ஒருபோதும் எங்களைக் கட்டுப்படுத்தாது.

அதனால், நிகழ்வரங்கில் எந்தப் பாடலை ஒலிக்கச் செய்ய வேண்டுமென வேறு எவரும் தீர்மானிக்க முடியாது என்பது வெளிப்படையானது. தமிழையும், தமிழ்த்தாயையும் போற்றித் தொழும் பாட்டன் பாரதிதாசன் எழுதிய வாழ்த்துப்பாடலை ஒலிபரப்புச் செய்வதற்குப் பொங்கும் பெருமக்கள், தமிழில் வணிகப்பெயர்ப் பலகைகளை வைக்கக்கோரிப் போராடிய இனமானத் தமிழர்களைக் கடந்தவாரம் திமுக அரசு கைதுசெய்து சிறைப்படுத்தியபோது உங்கள் நியாயத்தராசை எங்கு அடமானம் வைத்தீர்கள்? இது தமிழ்நாடு! தமிழுக்கும், தமிழர்களுக்குமான தேசம்; தமிழ்ப்பெருங்குடி மக்களின் வரலாற்றுத்தாய்நிலம்! இந்த நிலத்தில் பாரதிதாசன் எழுதிய தமிழ்த்தாய் பாடலை ஒலிக்கச் செய்வதே குற்றமென்றால், தமிழர்களை திராவிடர்களென திரிபுவாதம் செய்து செய்யப்படும் அடையாள மோசடித்தனம் மாபெரும் குற்றமில்லையா?

புத்தகக் கண்காட்சி அரங்கில் இருக்கும் பாதைகளுக்கு இளங்கோவடிகள், கம்பர், பாரதிதாசன், வள்ளலார் என தமிழ் முன்னோர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட அந்த வரிசையில் எந்த அடிப்படையில் ஐயா கருணாநிதியின் பெயரைச் சூட்டினீர்கள்? பெருந்தலைவர் காமராசர் பெயர் இல்லாத இடத்தில் ஐயா கருணாநிதி பெயர் மட்டும் எப்படி வந்தது? ஐயா காமராசரைவிட கருணாநிதி பெரிய மக்கள் தலைவரா? யாரை மகிழ்விக்க இந்த வேலை நடக்கிறது? புத்தகக் கண்காட்சி அரங்கில் தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகளில் அமைச்சர் பெருமக்களும், ஆளுங்கட்சியின் நிர்வாகிகளும் திமுகவின் புகழ்பாடலாம்; ஐயா கருணாநிதியின் துதிபாடலாம். ஆளுங்கட்சிக்கு வெண்சாமரம் வீசலாம். அப்போதெல்லாம் கெட்டுப் போகாத மேடை நாகரீகமும், சபையின் கண்ணியமும் நான் பேசுகிறபோது கெட்டுப் போய்விடுகிறதா? திமுகவையும், திராவிடத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து பேசிக்கொள்ளலாம்.

அப்போதெல்லாம் பெருமைக்குரிய பதிப்பகச் செம்மல்களுக்கு எந்த பொறுமலும் வருவதில்லை? நான் விமர்சித்துப் பேசினால் மட்டும் மேடையின் மாண்பு குலைந்துவிடுகிறதா? மாற்றுக்கருத்தையே ஏற்காத இந்தப் போக்கு சனநாயக விரோதம் இல்லையா? எல்லாத் தரப்புக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அறிவுலகப் பெருமக்கள், ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறி நிற்பதேன்? 75 லட்ச ரூபாய் நன்கொடைக்கு அறிவுலகத்தை ஆளுங்கட்சியிடம் அடமானம் வைக்கலாமா? இது வெட்கக்கேடு இல்லையா? நான் பங்கேற்றுப் பேசியப் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் இருந்தார் என்பதற்காக இந்த செயல்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத டிஸ்கவரி பதிப்பகத்தின் நிறுவனர் தம்பி வேடியப்பனுக்கு நெருக்கடி கொடுத்து மன்னிப்புக் கேட்க வைத்திருப்பது வெளிப்படையான அதிகார அச்சுறுத்தல் இல்லையா? தனியார் பதிப்பகம் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நூல்களை வெளியிட்டிருக்கும் நிலையில், தமிழ்த்தேசியம் சார்ந்த ஒரே ஒரு நூலை வெளியிட்டதற்கு அவரைக் குறிவைப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. அறிவுலகத்தின் அடையாளமாகத் திகழும் பதிப்பகத்தார்களும், புத்தக விற்பனையாளர்களும் ஆளுங்கட்சியிடம் சரணாகதி அடைந்திருப்பது சகித்துக் கொள்ளவே முடியாத இழிநிலையாகும்.

ஆகவே, தென்னிந்தியப் புத்தகப் பதிப்பகத்தார் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஒருதலைபட்சமானச் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு, டிஸ்கவரி பதிப்பகத்தின் நிறுவனர் தம்பி வேடியப்பன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்