தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது - ஜி.கே.வாசன்
|திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது வருத்தம் அளிப்பதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
நேற்று இரவு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அதாவது 3 வயது சிறுவன், 3 ஆண்கள், 3 பெண்கள் என 7 பேர் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. பலர் பலத்த காயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மருத்துவமனையின் கீழ்தளத்தில் உள்ள மின்சாதனம் வெடித்துச் சிதறியதால் தீ ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் மருத்துவமனையின் நோயாளிகள், உதவியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மருத்துவமனை நிர்வாகத்தினர் மருத்துவமனையின் பாதுகாப்புக்காக 24 மணி நேர கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர தீவிர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். தமிழகத்தில் எந்த மருத்துவனையிலும் இது போன்ற எந்த விபத்தும் இனிமேல் நடைபெறாமல் இருக்கவும், சுகாதரத்துறை தொடர்ந்து கண்காணிக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.