'கொள்கை அடிப்படையில் மட்டும்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று இல்லை' - தமிழிசை சவுந்தரராஜன்
|கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் மட்டும்தான் அமைக்கப்பட வேண்டும் என்று இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
புதுச்சேரி முன்னாள் துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி கட்சிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க.வுடன் சேர்ந்து பல கட்சிகள் கூட்டணி அமைக்கலாம். தி.மு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகி வந்து எதிர்கூட்டணியில் சேரலாம். கொள்கை அடிப்படையில் மட்டும்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று இல்லை. கொள்கைகள் வேறுபட்டாலும், பொதுவான ஒரு கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கூட்டணி அமைக்கப்படலாம். அதற்கு 1967-ல் இருந்து சரித்திரம் இருக்கிறது.
2026-ல் ஒரு பலமான கூட்டணி அமைய வேண்டும். எல்லோரும் இணைந்து உறுதியாக இருக்க வேண்டுமே தவிர, உதிரியாக இருந்து உதயசூரியனுக்கு வழிவிட்டுவிடக் கூடாது. எதிர்க்கட்சிகள் உதிரியாக இருப்பதால்தான் உதயசூரியன் உதிக்கிறது."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.