'பாடபுத்தகங்களில் ஆங்கிலேய ஆட்சி பற்றி புகழ்ந்து எழுதப்படுவதை ஏற்க முடியாது' - கவர்னர் ஆர்.என்.ரவி
|பாடபுத்தகங்களில் ஆங்கிலேய ஆட்சி பற்றி புகழ்ந்து எழுதப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை,
செந்தில்குமார் எழுதிய 'பாஞ்சாலங்குறிச்சி போர்கள்' புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி, பாரதத்தின் சுதந்திர இயக்கத்தின் உண்மையான வரலாற்றை விடாமுயற்சியின் மூலம் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் காலனித்துவ ஆட்சியை நிலைநிறுத்தும் முயற்சியில், ஆங்கிலேயர்கள் நமது நம்பிக்கையை குலைப்பதற்கும், நமது உண்மையான அடையாளத்தை சிதைப்பதற்கும் நமது வரலாற்றை மறைத்து திரித்தனர் என்று ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.
பாடபுத்தகத்தில் இருந்து உண்மையான இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர்களின் வரலாற்றை நீக்கி, அவர்களின் தியாகங்களை மறைத்தது மட்டுமின்றி, அடக்குமுறை நிறைந்த ஆங்கிலேய காலனிய ஆட்சியைப் பற்றி புகழ்ந்து, திராவிட இயக்கத்தைச் சுற்றியுள்ள கதைகள் எழுதப்படுவது நன்றி கெட்ட செயல் என்றும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.