< Back
மாநில செய்திகள்
தி.மு.க.-வி.சி.க. கூட்டணியை உடைக்க நினைக்கிறாரா விஜய்? - திருமாவளவன் பதில்
மாநில செய்திகள்

'தி.மு.க.-வி.சி.க. கூட்டணியை உடைக்க நினைக்கிறாரா விஜய்?' - திருமாவளவன் பதில்

தினத்தந்தி
|
8 Dec 2024 4:08 PM IST

தி.மு.க.-வி.சி.க. கூட்டணியை விஜய் உடைக்க நினைக்கிறாரா? என்ற கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்தார்.

மதுரை,

சென்னையில் நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "டாக்டர் அம்பேத்கர் பற்றிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு கூட வி.சி.க. தலைவர் திருமாவளவனால் வர முடியாத அளவிற்கு அவருக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் அழுத்தம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று குறிப்பிட்டார்.

மேலும், "200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" என்று கூறிய விஜய், "வேங்கைவயல் ஊரில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோன்று எனக்கு தெரியவில்லை. இதையெல்லாம் அம்பேதகர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுணிந்துபோவார்" என்று விமர்சித்தார்.

அதே சமயம், விஜய்யின் பேச்சில் தனக்கு உடன்பாடு இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். கூட்டணி கட்சிகளிடம் இருந்து தனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்றும், அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பலவீனமாக இல்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் இன்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தி.மு.க.-வி.சி.க. கூட்டணியை விஜய் உடைக்க நினைக்கிறாரா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், "விஜய் ஒரு கட்சியை தொடங்கியிருக்கிறார், ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். எனவே அவருக்கு அந்த நோக்கம் இருக்கத்தானே செய்யும். தி.மு.க.தான் தன்னுடைய முதல் எதிரி என்று வெளிப்படையாக தானே விஜய் சொல்கிறார்" என்றார். மேலும், "ஆதவ் அர்ஜுனா மீது வி.சி.க. சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்ற கேள்விக்கு, "அறிவிப்பு வரும்" என்று திருமாவளவன் பதிலளித்தார்.

மேலும் செய்திகள்