< Back
மாநில செய்திகள்
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? - சீமான்
மாநில செய்திகள்

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? - சீமான்

தினத்தந்தி
|
25 Dec 2024 9:33 PM IST

மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள பெருமைமிக்க அடையாளமாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனக்கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது.

அண்ணா பெயரில் நடக்கும் ஆட்சியின் தரத்திற்குத் தலைநகரின் மையத்தில் அமைந்து பாதுகாப்பு நிறைந்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையே சான்று பகர்கின்றது.

கலைஞர் கருணாநிதி பெயரில் அரசு மருத்துவமனை. மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவர் மீது கொலைவெறித் தாக்குதல். அறிஞர் அண்ணா பெயரில் பல்கலைக்கழகம். பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். காவல்நிலையங்கள் தோறும் விசாரணை கைதிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கம் காரணமாகப் பொதுவெளியில் சுதந்திரமாக மக்கள் நடமாட முடியாதபடி திமுக ஆட்சியில் நாள்தோறும் நடந்தேறும் குற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தெருவுக்குத் தெரு திராவிட மாடல் மதுக்கடைகள் காரணமாக இந்தியாவிலே அதிக விபத்துகள் நடக்கும் மாநிலத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருப்பதுதான் திமுக ஆட்சியின் ஆகப்பெரும் சாதனையாகும்.

கொஞ்சமும் அச்சமின்றி இத்தனை கொடூரக் குற்றங்கள் நாள்தோறும் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையை, தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்? திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று ஏட்டளவிலாவது இருக்கிறதா? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா இல்லையா? என்ற கேள்விகளை எத்தனை முறை எழுப்பினாலும் இன்று வரை திமுக அரசு திருந்தியபாடில்லை. சட்டம்-ஒழுங்கை சீர்படுத்த யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கு மற்றுமொரு துயரச் சான்றுதான் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றுள்ள மாணவி மீதான பாலியல் வன்கொடுமையாகும். சட்டம்-ஒழுங்கை இவ்வளவு கேவலமாக வைத்துக்கொண்டு அடுத்தத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று கூறுவதற்குக் கொஞ்சமும் நா நடுங்கவில்லையா ? ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே அடுத்தத் தேர்தல் வெற்றிக்குப் போடும் திட்டத்தில், அணுவளவாவது சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க சிந்தித்திருந்தால் பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமை நிகழந்தேறியிருக்குமா?

அரசியல் எதிரிகள் மீது அவதூறு வழக்குகள் தொடுப்பதற்கும், அவர்களின் தனிமனித உரிமைகளைப் பறித்துப் பொதுவெளியில் பொய் பரப்புரை செய்வதற்கும் தமிழ்நாடு காவல்துறையைப் பயன்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது, சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் கொடூரர்களை அடக்கி ஒடுக்குவதில் காட்டியிருந்தால் சமூகக் குற்றங்களைப் பெருமளவு குறைத்திருக்க முடியும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இதற்கு மேலாவது காவல்துறையை முடுக்கிவிட்டு சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டுவந்து, நாட்டு மக்களை இத்தகைய கொடும் குற்றங்களைப் புரியும் சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, இனி இதுபோன்ற எண்ணமே யாருக்கும் வராத வண்ணம் மிகக்கடுமையான தண்டனையை அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .

மேலும் செய்திகள்