வெளிச்சந்தையில் துவரம் பருப்பு விலை உயர அரசு துணை போகிறதா? - ராமதாஸ் கேள்வி
|நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு தடையின்றி வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம்பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் வந்து விடும் என்ற பதில் தான் கிடைக்கிறதே தவிர, துவரம்பரும்பு வினியோகிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய விவகாரங்களில் காட்டப்படும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.
சென்னையில் மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகளில் பருப்பு வினியோகிக்கப்படவில்லை. நவம்பர் மாதம் தொடங்கி 22 நாட்கள் ஆகி விட்ட நிலையில், பல நியாயவிலைக்கடைகளுக்கு வெறும் 200 கிலோ துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பெரும்பாலான கடைகளுக்கு துவரம் பருப்பே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நியாயவிலைக்கடைகளில் தடையின்றி துவரம் பருப்பு வழங்குவது சாத்தியமாகாத ஒன்றல்ல. அது மிகவும் எளிதான ஒன்றுதான். ஆனால், அதைக் கூட தமிழக அரசால் செய்ய முடியாதது ஏன்? என்பதுதான் தெரியவில்லை.
நியாயவிலைக்கடைகளில் துவரம் பரும்புக்கு தட்டுப்பாடு ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்போது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்குத் தேவையான துவரம் பருப்புக்கான கொள்முதல் ஆணைகள் கடந்த செப்டம்பர் மாதமே வழங்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசே தெரிவித்த பிறகும் கூட நவம்பர் மாதத்தில் பற்றாக்குறை நிலவுவது ஏன்?.
நியாயவிலைக்கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதன் நோக்கமே வெளிச்சந்தையில் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்துவதுதான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பு முறையாக வழங்கப்படாததால் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.180ஆக இருந்த ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை இப்போது ரூ.210 ஆக உயர்ந்திருக்கிறது. வெளிச்சந்தையில் பருப்பு விலை உயருவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு நியாயவிலைக்கடைகளில் பருப்பு வழங்கலை தாமதப்படுத்துகிறதா? என்பது தெரியவில்லை.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாயவிலைக்கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம் ஆகும். இதை உணர்ந்து கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு தடையின்றியும், தாமதமின்றியும் வழங்கப் படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.