
உலக மகளிர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்

பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நாம் தொடங்கிய தோழி விடுதிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி இன்று (8.3.2025) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விழா நடைபெற்றது.
அதில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ""நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை. ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை" என்ற கவிஞர் கந்தர்வன் கவிதை வரிகளுக்கேற்ப இல்லத்தை மட்டுமின்றி, உலகத்தையும் இயங்கச் செய்யும் ஆற்றல்மிக்க மகளிர் அனைவருக்கும் உங்கள் சகோதரனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் "உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்"
வரலாற்றுப் பெருமையும், புகழ்மிக்க சாதனையும் கொண்டிருக்கக்கூடிய இந்த மகளிர் நாள் விழாவில் பங்கெடுத்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். மார்ச் 1 - என்னுடைய பிறந்தநாள். மார்ச் 8 - உலக மகளிர் நாள்! மகளிர் நாள் கொண்டாடப்படுகின்ற இதே மார்ச் மாதத்தில் பிறந்தவன் என்பதை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் நான் அடைகிறேன்.
சமூகத்தின் சரிபாதியான மகளிருக்கான நாள் இது. "இங்கே ஆண்களுக்கு என்ன வேலை?" என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். "தாயில்லாமல் நானில்லை" என்று சொல்லத்தக்க வகையில், "பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை" என்பதை உணர்ந்த ஆண்கள் நாங்கள் என்பதால், உங்களோடு சேர்ந்து உலக மகளிர் நாள் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறோம்.
திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமே ரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான்! அதுவே முழுமையான சமூக நீதி! திராவிட இயக்கத்தை உருவாக்கிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், வாழ்நாளெல்லாம் பெண் விடுதலைக்காக உழைத்தார்.
மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டும் என்றால், பெண்ணை அடிமையாக நினைக்கின்ற எண்ணம் ஒழிந்தால்தான் முடியும் என்று சொன்னார்! அதனால்தான், திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் பெண்களுக்கு உரிமைகள் மீட்டுத் தரப்பட்டது!
திராவிட இயக்கத்துக்கு ஆதி விதையான நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை தரப்பட்டது. பெரியார் வழித்தடத்தில் வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமண சட்டத்தை நிறைவேற்றினார். பெரியார் போட்ட தீர்மானத்தை சட்டமாக்கி சொத்துரிமை தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்! மேலும், காவல்துறையில் மகளிர், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்று பல முற்போக்குத் திட்டங்களை கொண்டு வந்தார்.
· நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், புதுமைப் பெண், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினரை பங்கு பெறச் செய்திருக்கிறோம்.
· பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணங்களை தடுத்து அவர்களை பாதுகாக்க 'பாலின வள மையங்கள்'!
· உள்ளாட்சியில் பெண்களை அதிகாரம் மிக்கவர்களாக உயர்த்த, 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கினோம்! அதில் வெற்றி பெற்றதில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் சுய உதவிக் குழு மகளிர்தான்!
· வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நாம் தொடங்கிய தோழி விடுதிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
· இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் அறிவிக்க விரும்புவது, புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும். அதுவும், 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, R.O. முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் அதை அமைக்க இருக்கிறோம்.
நான் எங்கே சென்றாலும், அங்கே கூடுகின்ற கூட்டத்தில் அதிகம் இருப்பது பெண்கள்தான். "பெண்களின் உரிமையை அனைத்து தளங்களிலும் உறுதிசெய்கின்ற ஆட்சியாக, கோரிக்கைகள் வைக்காமலேயே நிறைவேற்றுகின்ற ஆட்சியாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது" என்று நீங்கள் பாராட்டுகிறீர்கள். அந்த தருணம், "இதுதான் ஆட்சியின் பலன் - இதற்காகத்தான் ஆட்சிக்கு வந்தேன்" என்று நினைத்து, நினைத்து நான் பூரிப்படைகிறேன்.
இந்த நிகழ்ச்சி அரங்குக்கு நான் வருவதற்கு முன்னால், விழா அரங்கின் வாயிலில், 250 ஆட்டோக்களை பயனாளிகளுக்கு வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்துவிட்டு தான் வந்திருக்கிறேன்.
சென்னை மாநகரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற விதமாகவும், பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற விதமாகவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், தலா ஒரு இலட்சம் ரூபாய் அரசு மானியத்துடன் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கி இருக்கிறோம். இதில், காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த சிறப்புமிகு விழாவில், 1,000 மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகளுக்கு நான் அடையாள அட்டைகளை வழங்கி இருக்கிறேன். அதன் பயன்கள் என்ன தெரியுமா?
· கிராம மற்றும் நகரப் பேருந்துகளில், சுய உதவிக் குழுவினர் தாங்கள் தயாரிக்கின்ற பொருட்களை 25 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.
· முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தவர்கள் பயன்களைப் பெறலாம்.
· கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெறப்படுகின்ற பல்வேறு கடன்கள் பெற முன்னுரிமை.
· கோ-ஆப் டெக்ஸ் பொருட்களுக்கு 5 விழுக்காடு கூடுதல் தள்ளுபடி.
· ஆவின் பொருட்களுக்கு குறைந்த விலை.
· இ-சேவை மையங்களில், 10 விழுக்காடு சேவைக் கட்டணம் குறைவு. இதையெல்லாம் சிறந்த முறையில் பயன்படுத்தி நீங்கள் வளம்பெற வாழ்த்துகிறேன்
இன்று தமிழ்நாடு முழுவதும் 34 ஆயிரத்து 73 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4 லட்சத்து 42 ஆயிரத்து 949 மகளிருக்கு 3 ஆயிரத்து 190 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கி இருக்கிறேன்.
இதை தொடங்கி வைக்கின்ற விதமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுகின்ற 3 ஆயிரத்து 584 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 592 மகளிருக்கு 366 கோடியே 26 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை இந்த நிகழ்ச்சியில் வழங்க இருக்கிறேன்.
இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் சுய உதவிக் குழுக்களுக்கு, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர்கள் வங்கிக் கடன் இணைப்புகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்க இருக்கிறார்கள்.
கலைஞர் அவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுவை பற்றி சொல்லும்போது, "வைக்க வேண்டிய இடத்தில் வைத்து, கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து, பாதுகாக்க வேண்டிய இடத்தில் பாதுகாக்கின்ற அமைப்பாக இருப்பதால்தான் இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் புழங்குகின்ற இயக்கமாக மாறியிருக்கிறது என்று சொன்னார். வங்கிக் கடன் இணைப்புகளைப் பெற்ற மகளிர் குழு சகோதரிகள், நான் கேட்டுக் கொள்வது, அந்தத் தொகையை நாங்கள் வழங்குகின்ற கடன் என்று நினைக்காமல், நம்முடைய அரசும், நானும் உங்கள் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையின் அடையாளமாக நீங்கள் நினைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சிறந்த தொழில் முனைவோராக உயர்ந்திட வாழ்த்துகிறேன். தமிழ்நாடு காவல் துறை சார்பில், பெண் அதிரடிப்படை காவலர்கள் இங்கே சாகச நிகழ்ச்சிகளை எல்லாம் செய்து காண்பித்தார்கள். மேலும், எனக்கு அணிவகுப்பு மரியாதையும், பாதுகாப்பும் வழங்குகிறார்கள். அதைப் பார்க்கும்போது, அறிவிலும், வீரத்திலும், சிறந்த சங்க கால வீரத் தமிழச்சிகளை நேரில் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.
அதுமட்டுமல்ல, நம்முடைய திட்டங்களை விளக்கி கலை நிகழ்ச்சியாக நடத்தி காண்பித்தார்கள், சிறப்பித்தார்கள். ஏதோ ஒரு சிறப்பான சினிமா பார்த்த மகிழ்ச்சியை எனக்கு அது தந்தது.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிகழ்ச்சியால், உங்களுக்காக இன்னும் உழைக்க வேண்டும் என்று உற்சாகம் தான் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நம்முடைய ஆட்சியின் இலக்கணம் மகளிர் உயர, மாநிலம் உயரும் அதுதான். அனைத்து துறைகளிலும், எங்கு பார்த்தாலும், பெண்கள்தான் இருக்கிறீர்கள். தடைகளை தாண்டி சாதனைகளை படைக்கின்ற உங்களைப் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்?
· இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருது பெறக்கூடிய டாக்டர் யசோதா சண்முக சுந்தரம் அவர்கள்.
· பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த செளமியா
· பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துகின்ற வகையில் சிறப்பாக செயல்பட்ட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திருமிகு அழகு மீனா அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமிகு கலைச்செல்வி மோகன் ஆகியோருக்கும்,
· நன்னிலம் நில உடைமைத் திட்டத்தின் கீழ் நில உதவியும், நிதி உதவியும் பெறக்கூடிய 5 பேர்
· ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வெளிநாடு சென்று பட்ட மேற்படிப்பு படிக்கச் செல்லும் 5 மாணவியர்
· தொழிலாளர் நலத்துறையின் சார்பில், உதவி பெறும் 50 மகளிர் ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
· இன்றைக்கு நாம் கொண்டாடுகின்ற மகளிர் தினமானது, கல்வி, சமவாய்ப்பு, சுதந்திரம், பெண்ணுரிமை, சுயமரியாதை, தன்னம்பிக்கை, தற்சார்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் மகளிர் தங்களுடைய உரிமைகளை போராடி வென்றெடுத்த தினம்!
உங்களுடைய மன வலிமையையும், ஆளுமைத் திறனையும், நினைப்பதை நிறைவேற்றுகின்ற ஊக்கத்தையும் பார்க்கும்போது, நான் பெருமிதம் அடைகிறேன். இந்தக் காட்சியை 50 ஆண்டுகளுக்கு முன்னால் அவ்வளவு சுலபமாக பார்க்க முடியாது. 100 ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்கவே முடியாது. ஆனால், அனைத்துப் பக்கமும் பெண்கள் வந்துவிட்டார்கள்.
நான் முதல்-அமைச்சராக அனைத்து மக்களுக்கும் வைக்கக்கூடிய கோரிக்கை, ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும். பெண்கள் நமக்காக தியாகம் செய்ய பிறக்கவில்லை, அவர்களும் நம்மைப் போலவே, அனைத்து உரிமைகளும் கொண்ட சக மனிதர் என்று எண்ணமும் எல்லோருக்கும் தோன்ற வேண்டும்.
அரசியலில், வேலை பார்க்கின்ற இடத்தில் என்று அனைத்து இடங்களிலும் உரிய மதிப்பும், மரியாதையும், பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். கேலி பேசுவதும், அவர்கள் வளர்ச்சியைக் கொச்சைப்படுத்துவதும் இருக்கவே கூடாது. அதுதான் உண்மையான சமுதாய சிந்தனை வளர்ச்சி! இதை எல்லோரும் கடைப்பிடிக்கவேண்டும்.
திராவிட மாடல் அரசில் பெண்களுக்கான திட்டங்களைப் பார்த்து பார்த்து இப்போது ஆண்களும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். "என்னங்க எல்லா திட்டங்களும் பெண்களுக்குத் தானா…எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள்" என்று ஆண்கள் கேட்கக்கூடிய அளவில் தான் இன்றைக்கு செயல்படுகிறோம். அது தொடரும், தொடரும்.
மகளிர் உரிமைத் தொகையால் பெண்கள் தங்களுடைய குடும்பத்தை பாதுகாக்கிறார்கள். அது ஆண்களையும் சேர்த்துதான் வளர்ச்சியடையச் செய்யும். என்னை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து, பாசம் காட்டுகின்ற அத்தனை தாய்மார்கள் - அவர்கள் குடும்பத்தின் ஆண்கள்- என்று அனைத்துத் தரப்பிற்குமான நல்லாட்சியாக, திராவிட மாடல் ஆட்சி எப்போதும் தொடரும்!
எனது அருமை சகோதரிகளே! நீங்கள் கடமை செய்ய மட்டுமல்ல, உரிமை பெறவும் பிறந்தவர்கள். அன்புடன், பண்பும் சேர்ந்து வீரமும், விவேகமும் உங்களுடைய அணிகலன் ஆகட்டும். அறிவும், துணிச்சலும் உங்கள் அடையாளமாக ஆகட்டும். சாதனைகள் மூலமாக உயருங்கள். ஒவ்வொரு பெண்ணும், மதிப்பிட முடியாத ஆற்றல்! உலகம் உங்களுடையது! உங்களுக்கானது! என்று உங்கள் சாதனைகள் தொடரட்டும்! தொடரட்டும்! தொடரட்டும்
இவ்வாறு அவர் கூறினார்.