
நாளை உலக மகளிர் தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

உலக மகளிர் தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
உலக மகளிர் தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
'எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்கிற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப, இன்று எல்லாத் துறைகளிலும் புதுமை படைத்து, பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி என பல்வேறு நற்பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற பெண்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில், தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்பை அள்ளிக் கொடுப்பதில் அன்னையாக, அறிவை அருளும் ஆசிரியையாக, பாசத்தோடு அரவணைக்கும் சகோதரியாக, மனதோடு மனம் கலந்த மனைவியாக, மகளாக, நட்பைக் காட்டும் தோழியாக, தர்மத்தைச் சொல்லும் பாட்டியாக என, வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கின்றவர்கள்தான் பெண்கள். தற்போது பெண்கள், கல்வி அறிவு பெற்று ஆட்சித் துறை, தொழில் துறை, அறிவியல், மருத்துவம், சட்டம், காவல், இலக்கியம், கல்வி போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றி வெற்றிநடை போட்டு வருதை நம் கண்களால் காண முடிகிறது.
இன்றைக்கு பெண்களே இல்லாத துறை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவும், புரட்சிப் பெண்ணாகவும் விளங்கி வருகின்றார்கள். பெண்ணுரிமை வாழட்டும்! வளரட்டும்! என்ற வாழ்த்துதலோடு, மீண்டும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்மையை வணங்குவோம்! பெண்மையைப் போற்றுவோம்! பெண்மையால் பெருமை கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
அனைவரின் உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789-ம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911-ம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.
21-ம் நூற்றாண்டு பிறந்து கால் நூற்றாண்டாகி விட்ட போதிலும் இன்னும் பெண்களுக்கு முழுமையான விடுதலையும், உரிமைகளும் கிடைக்கவில்லை. வீடுகள் தொடங்கி அலுவலகம் வரையிலும், ஆட்சி மன்றத்திலும் பெண்கள் அவர்களின் உரிமைகளுக்காக போராடும் நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது. சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க சட்டம் இயற்றப் பட்டாலும், அதிகாரம் இன்னும் எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் வழங்கப்பட்டாலும் கூட, அதை பயன்படுத்தும் உரிமை குடும்பத்தினரிடம் தான் இருக்கிறதே தவிர, பெண்களின் கைகளுக்கு கிடைக்கவில்லை.
இப்படியாக உரிமை, அதிகாரம், விடுதலை ஆகியவையும், பெண்களும் தண்டவாளங்களைப் போல இணையாமல் இணையாகவே பயணிக்க வேண்டியுள்ளது. ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும்; சாதனைகளை படைக்க வேண்டும் என்பன தான் நமது உயர்ந்த நோக்கங்கள். அந்த நோக்கங்கள் எட்டப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை மகளிர் தினத்தில் மட்டும் பயன்படுத்தும் முழக்கமாக வைத்துக் கொள்ளாமல், உண்மையாகவே மகளிருக்கு முழுமையான விடுதலையையும், உரிமையையும் வென்றெடுத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம் ஆகும். ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான். சங்க காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியும்.
உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயமும் தமிழ்ச் சமுதாயம் தான். மனித நாகரிகங்கள் வளரக் காரணமாகவும், வாழ்வாதாரம் மற்றும் பாசன ஆதாரமாகவும் திகழும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயரை சூட்டியதிலிருந்தே மகளிரை தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு மதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். நடைமுறை வாழ்விலும் அதே மரியாதை வழங்கப்பட வேண்டும்.
ஆனால், அந்த மரியாதை பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது மட்டுமின்றி, அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடக்கூட முடியாத நிலை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது. பாடத்தையும், நற்பண்புகளையும் கற்றுத்தர வேண்டிய பள்ளிக்கூடங்கள் கூட இன்று பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவையாக இல்லை. பொது இடங்களும் பெண்களுக்கு ஆபத்தான இடமாக மாறியுள்ளன. 2023&ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024&ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 52 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்தே பெண்களுக்கு தமிழ்நாடு எந்த அளவுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இது உண்மையாகவே கவலையளிக்கும் செய்தியாகும்.
கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். அதற்கு அவர்களின் அறிவும், திறனும் தான் காரணம். அவர்களுக்கு உரிமையும், அதிகாரமும் எட்டாக்கனியாக உள்ளன. அவற்றை போராடிப் பெறும் திறன் மகளிருக்கு உண்டு. பெண்கள் அச்சமின்றி, நடமாடும் சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுத்தாலே பெண்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் வென்றெடுத்துக் கொள்வர். பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்று தான் உண்மையான மகளிர் நாளாக அமையும். அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்காக உழைக்க இந்த நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
சுதந்திர இந்தியாவில் மகளிர் தங்களுக்கான உரிமைகளை வலியுறுத்திப் போராடி வெற்றி கண்ட நாளை உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றனர். அவர்களது உரிமைகளை பாதுகாப்பதில் காங்கிரஸ் பேரியக்கம் எப்போதுமே முன்னோடியாக இருந்து வருகிறது. இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி, ஜனாதிபதியாக பிரதீபா பாட்டில், மக்களவை சபாநாயகராக மீராகுமார் ஆகியோரை பதவியில் அமர்த்திய பெருமை காங்கிரஸ் பேரியக்கத்தையே சாரும். மகளிர் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்பதில் காங்கிரஸ் கட்சி எப்போதுமே முனைப்பாக இருந்து செயல்பட்டு வருகிறது.
மகளிர் தங்களது உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாகவும் உயர்வு அடைந்து அவர்களது லட்சியங்கள் நிறைவேறுவதன் மூலமே ஏற்றம் பெறும். மத்திய பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது.
மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் நல்ல சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அனைத்து மகளிர் சமுதாயத்தினருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.