கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
|கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், கனமழையும், தீவிர கனமழையும் பெய்து நகரங்கள் முதல் கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் வரை மழைநீரில் மூழ்கியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தகுந்த உதவிகளை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணங்களை வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வட மாவட்டங்ளில் ஒரு சில மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம்தான் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பலருக்கு கிடைக்கவில்லை என்று மக்களிடையே கேள்வி எழும்பியுள்ளது.
எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய ஆய்வுகளை செய்து இழப்புகளுக்கு ஏற்ப பாரபட்சம் இல்லாமல் நிதியுதவி அளிக்க வேண்டும். அதோடு மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களில் இருந்து மக்களை காக்கும் வகையில் நடமாடும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் பெஞ்சல் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டு அதன் சுவடு மறைவதற்குள் அடுத்ததாக தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு அதனால் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தாக்கத்தால் மேற்கு மற்றும் வடமேற்கு கடலோர பகுதிகளில் கனமழையும், மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளது.
ஆகவே தமிழக அரசு அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்புயலால் மீண்டும் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவற்றிற்கு காலதாமதம் இல்லாமல் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தென்மாட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மக்கள் இயல்புநிலை பாதிக்கப்பட்டு பெரிதும் துன்பத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களில் அனைத்து குடும்ப கார்டுகளுக்கும் குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டும். மேலும் கால்நடைகளையும், வீடுகளையும், வாகனங்களையும் இழந்தவர்களுக்கு அவர்களின் இழப்பிற்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.