< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியாவே திரும்பி பார்த்து வாழ்த்துகிறது: வைரமுத்து பேச்சு
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியாவே திரும்பி பார்த்து வாழ்த்துகிறது: வைரமுத்து பேச்சு

தினத்தந்தி
|
31 Dec 2024 1:10 PM IST

தமிழர்களின் அறிவு அடையாளம் திருக்குறள் என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் நடைபெற்றுவரும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

தமிழுக்கு அதிகாரம் தந்தவர் வள்ளுவ ஆசான். தமிழ்நாட்டிற்கு அதிகாரம் தந்தவர் எங்கள் தளபதி மு.க.ஸ்டாலின். தமிழின் அதிகாரமும், தமிழர்களின் அதிகாரமும் இன்று ஒன்றுகூடுகிற சங்கமத்தை பார்க்கிறேன். கண்ணுக்கு இனிமையான திருவிழா இது.

ஒவ்வொரு நாட்டிற்கும் அடையாளம் உண்டு. குடும்பங்களுக்கு அடையாளம் உண்டு. மனிதனுக்கு அடையாளம் உண்டு. கட்சிக்கு அடையாளம் உண்டு. தமிழ்நாட்டிற்கு சில அடையாளங்கள் உண்டு. தமிழர்களின் மொழி அடையாளம் தமிழ். தமிழர்களின் அறிவு அடையாளம் என்று சொன்னால் அது திருக்குறள். தமிழர்களின் அறிவு அடையாளம் திருக்குறள். அரசன், மதம், அரசாங்கம் என எந்த ஆதரவும் இன்றி காலத்தால் மிதந்து மிதந்து தன் ஞானத்தால் கரையேறிய நூல், தமிழன் எழுதிய திருக்குறள் என்பதற்காக நாம் பெருமைப்படலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை அறம்தான்.

வள்ளுவன் வகுத்துகொடுத்த பெருவழியில் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆட்சி நடந்து கொண்டிருப்பதை பார்த்து இந்தியா எங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திரும்பி நின்று பார்த்து வாழ்த்துகிறது. உலகத்தின் எல்லா பூச்செடிகளிலும் பூக்கிற பூக்களை எல்லாம் கொண்டுவந்து தொடுத்து ஸ்டாலினின் தோலில் அணிவித்தால் கூட அது பிழை இல்லை, அதில் ஒன்றும் குறை இல்லை என்று நான் கருதுகிறேன்.

மகளிரை உயர்த்துபிடிக்கிற ஒரு அரசாட்சிதான் நீண்டு நிலைக்கும் என்பது திண்ணமாக சொல்ல முடியும். பெண்களை மையப்படுத்துகிற இலக்கியம் வெல்லும். பெண்ணை மையப்படுத்துகிற குடும்பம் வெல்லும். பெண்ணை மையப்படுத்துகிற ஆட்சி நிலைக்கும். இன்றைக்கு தமிழ்நாட்டு பெண்களை போல் இந்திய பெண்கள் யாரும் இவ்வளவு மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும், திறமையாகவும், திடமாகவும் இல்லை என்ற நல்லாட்சியை எங்களுடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வழங்கி கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்